கொலம்பியா நிலநடுக்கம்; 132 பேர் பலி; அவசரநிலை பிரகடனம்
கொலம்பியாவில் திங்கட்கிழமை (10) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், 570 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து கொலம்பியா முழுவதும் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், சொக்கோ மாகாணத்தில் தரைமட்டத்திலிருந்து 103 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அவசரநிலை பிரகடனம்
நிலநடுக்கத்தின் மையம் ‘சான் ஜோஸ் டெல் பால்மர்’ என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்திருந்தது. அங்குச் செல்லும் பாதைகள் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உள்ளூர் மேயர் லியோன் பாபியோ மரின் தெரிவித்துள்ளார்
மேற்கு கொலம்பியா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டன. நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 55 கி.மீ (34 மைல்கள்) தொலைவில் உள்ள காபி உற்பத்திப் பிராந்தியமான பெரெய்ரா நகரமே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அதிகளவிலான உயிரிழப்புகள் இந்நகரத்திலேயே பதிவாகியுள்ளன. பெரெய்ராவைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் ‘வால் டெல் காவ்கா’ பிராந்தியமும் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் படையினரின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.