;
Athirady Tamil News

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க புதிய திட்டம் ; ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை

0

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நெல் கொள்வனவில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதன்படி, மாவட்டச் செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவுக்கான கடன் வழங்கும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல்லை குறைந்தபட்சம் ரூ.120க்கு கொள்வனவு செய்ய வேண்டும். ஒரு விவசாயியிடமிருந்து ஹெக்டயருக்கு அதிகபட்சம் 4,000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும்.

கொள்வனவு செய்யப்படும் நெல் மற்றும் விவசாயிகள் தொடர்பான முறையான ஆவணங்களைப் பேணுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரிசியை விற்பனை செய்த பின்னர் பெற்ற கடனை அரசாங்கத்திடம் மீளச் செலுத்த வேண்டும் எனவும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் ஆலை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் போகங்களிலும் இத்தகைய சலுகைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதுடன், செயலிழந்துள்ள சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலைகளை மீண்டும் செயற்படுத்த முடியும் என ஆலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.