;
Athirady Tamil News

தீர்வு கிடைக்கும் வரை விட்டுக் கொடுப்பு கிடையாது – வடமாகண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் திட்டவட்டம்

0

தீர்வு கிடைக்கும் வரை விட்டுக் கொடுப்பு கிடையாது எனவும் வடமாகாண ஆளுநருடன் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்புக்கும் எமது சங்கத்திற்கும் தொடர்பு இல்லை என வடமாகண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண சபையில், வடமாகாண உயர் அதிகாரிகளின் கலந்துரையாடல் ஒன்றில் , அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் தரக்குறைவாகவும் , விரும்பத்தகாத வார்த்தை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்ட ஒலிப்பதிவு ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி , கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அந்நிலையில் , குறித்த அதிகாரிகள் இனம் காணப்பட்டு , அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கடந்த திங்கட்கிழமை வடமாகண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்து , வடமாகாண ஆளுநர் , மாவட்ட செயலர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜரும் கையளித்தனர்.

இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில், வடமாகண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

ஆளுநருடனான நேற்றைய தினம் புதன்கிழமை சந்திப்பிற்கும் குறித்த போராட்டத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்த எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எமது போராட்டத்தின் முதல்நிலை நோக்கமான ‘குறித்த அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்” என்பதில் இருந்து நாம் பின்வாங்கப்போவது இல்லை என்பதை எம் சக உத்தியோகத்தர்கள், எமக்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை உடையோருக்கு தெரியப்படுத்துகின்றோம்.

தொழிற்திணைக்களத்தில் முறையாக பதிவுசெய்து வடக்கு மாகாணம் தழுவிய வகையில் மாகாண சேவை மற்றும் மத்திய சேவையில் கடமையாற்றும் மூவாயிரத்துக்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டு கடந்த 10 வருங்களுக்கு மேலாக செயற்படும் நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி செயற்படுவோம் என்பதனையும், குறித்த போராட்டத்தின் இலக்கை அடைய நாம் ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்த குறித்த கலந்துரையாடலுக்கு, வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய எமக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதனை கவனத்தில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது போராட்டத்தையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் மலினப்படுத்தும் நோக்கோடு பிரதான தொழிற்சங்கமாகிய எம்மைத் தவிர்த்து பிறிதொரு பகுதியினரை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியமைக்காக எமது கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில்  ஆளுநர்  முன்னெடுக்க மாட்டார் என நம்புவதோடு தனது நேர்மையான செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியால் ஆளுநராக நியமிக்கப்பட்ட வடமாகாண  ஆளுநர் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் “வாய்மையே வெல்லும்” என்ற நோக்கோடு செயற்படுவார் என நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.