;
Athirady Tamil News

மதுபானக் கடையில் லட்சக்கணக்கில் பில் தொகையை செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

0

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கடை ஒன்றில், லட்சக்கணக்கில் பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம்பெண்ணின் தலை மொட்டையடிக்கப்பட்ட விசித்திர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி அடையாள அட்டை
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் பிரபல ஹோஸ்ட் பார் ஒன்று இயங்கி வருகிறது. அந்த மதுபான கடைக்கு கடந்த 25-ந்தேதி 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். மதுபானக் கடைக்குள் நுழைவதற்காக அந்த பெண் தனது வயதை மறைத்து, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளார்.

தப்பிக்க முயன்ற இளம்பெண்
மேலும் அங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் அடுத்தடுத்து சுமார் 200 மதுபானங்களை ஆர்டர் செய்து அந்தப் பெண் வாங்கியுள்ளார். இதனால் பில் தொகை 60,000 தாய் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ1.5 லட்சம்) ஆகியுள்ளது. பில் தொகையைச் செலுத்த வேண்டிய நேரத்தில், தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

விசித்திரமான ஒப்பந்தம்
அவரை மடக்கிப் பிடித்த பார் ஊழியர்கள், பணத்தைப் பெற அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாரின் பொது மேலாளர், போலீசாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்த பெண்ணிடம் விசித்திரமான ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளார்.

இளம்பெண்ணிற்கு மொட்டையடித்த மேலாளர்
பெண்ணின் நீண்ட கூந்தலை 3,000 பாட் பணத்திற்கு வாங்குவதாக “முடி கொள்முதல் ஒப்பந்தம்” தயாரித்து, அவரிடம் கட்டாயக் கையெழுத்து வாங்கியுள்ளார். அதன் பின்னர், எலக்ட்ரிக் கிளிப்பர் இயந்திரம் மூலம் அந்த இளம்பெண்ணின் தலை முழுமையாக மொட்டையடிக்கப்பட்டது.

வீடியோ வைரல்- போலீசார் விசாரணை
இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாருடன் சென்று பாங் யி கான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பார் நிர்வாகத்தினர் தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தித் தலையை மொட்டையடித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, பார் நிர்வாகம் தரப்பில் பொதுமன்னிப்பு கோரப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இளம்பெண்ணை அவமானப்படுத்திய பார் மேலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.