;
Athirady Tamil News

என்.ஜி.ஓ. சட்டமூலம், 22ஆவது திருத்தம், ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு(video)

0
video link-https://fromsmash.com/hPUXGPIjGb-dt

அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசாவில் இடம்பெற்றது.

வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் உதவி சுகாதார ஊழியர்களின் கலாச்சார ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டமை ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது முஸ்லிம் சமூகம் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு, அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டதைப் போன்று, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இப்புதிய சட்டமூலங்கள் மற்றும் சம்பவங்கள் ஊடாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் என்.ஜி.ஓ. சட்டமூலத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இச்சட்ட ஏற்பாடுகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதேவேளை, முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது சமய, கலாச்சார அடையாளங்களின் அடிப்படையில் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நிரந்தரமான சட்ட ரீதியான தீர்வு அவசியம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் விரிவாக முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்கு ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க சமூகத் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களில் சமூகத்திற்குத் தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.