யாழில் கிணறுகள் திடீரென பெருக்கெடுத்ததால் பரபரப்பு; பிரதேசவாசிகள் அச்சம்!
யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
நில மட்டத்திற்கு மேலே தண்ணீர்
அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது. இது குறித்து பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,
குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும்.
இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.