;
Athirady Tamil News

அமெரிக்க விமானப்படை எஃப்-16 போர் விமானம் விபத்து: நல்வாய்ப்பாக விமானி உயிர்தப்பினார்!

0

மிச்சிகன்: மிச்சிகனில் வழக்கமான பயிற்சிப் பணியின்போது டெக்சாஸ் விமான தேசியக் காவல்படைக்குச் சொந்தமான எஃப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக விமானி காயங்களுடன் உயிர்தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் தேசியக் காவல்படையின் 149 ஆவது போர் விமானப் பிரிவால் இயக்கப்படும் எஃப்-16 போர் விமானம், அல்பேனாவில் உள்ள விமான தேசியக் காவல்படையின் போர் தயார்நிலை பயிற்சி மையத்திலிருந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கவுண்டி சாலை 633 மற்றும் பிளேர் டவுன்ஹால் சாலைக்கு அருகில் திடீரென விமானம் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்டு காயங்களுடன் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய விமானிக்கு காயங்கள் ஏற்பட்டிருந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக விமானப் பிரிவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, விபத்து நடந்த பகுதியில் ரசாயனக் கசிவு அபாயம் ஏற்பட்டதால், அந்த இடத்திலிருந்து ஒரு மைல் சுற்றளவில் உள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மிச்சிகன் மாநில காவல்துறை உத்தரவிட்டது. அந்த இடத்தைச் சுற்றியுள்ள சாலைகளை மூடி, அந்தபகுதிக்கான வருவதை தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளையும் கேட்டுக்கொண்டனர். பின்னர் அந்த பகுதிக்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. குடியிருப்பாளர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், தங்கள் இருப்பிடத்தில் உள்ள ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

பிற்பகலில் எஃப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்திய டெக்சாஸ் ராணுவம், விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்கவில்லை.

எப்-16 விமானம் கீழே விழுவதற்குச் சற்று முன்பு, ஒரு பறவை மோதியிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் ஒலிப்பதிவுகள் குறிப்பிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், விமானத்தில் பறவை மோதியிருக்கலாம் என்பதை ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.