;
Athirady Tamil News

அனோஜனுக்காக ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் சவூதி மன்னரிடம் கோரிக்கை

0

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசனுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க உள்ளார்.

அனோஜனரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு விரைவில் சிறப்பு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தைச் சவூதி மன்னரிடம் நேரில் கொண்டு சேர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் தலைமையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்றைச் சவூதி அரேபியாவுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் ஒரு பகுதியாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் சவூதி சட்ட நடைமுறைகளை ஆராய்ந்து, அனோஜனின் விடுதலைக்காக எடுக்கப்பட வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்துள்ளர்ர்.

கடந்த ஜூலை 01 ஆம் திகதி அனோஜனின் பெற்றோர் இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு முதன்முதலில் அறிவித்ததாகவும், அன்றிலிருந்து அனோஜனைக் காப்பாற்ற அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனோஜன் சிவராசன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) முறைப்படி பதிவுசெய்து வெளிநாடு சென்றவர் என்பதால், அவரது வழக்கு விசாரணைக்காகச் சவூதி அரேபியாவில் இதுவரை செலவிடப்பட்ட தொகையை அவரது பெற்றோருக்கு அரசாங்கம் மீள வழங்கும் என்றும், இனிவரும் அனைத்துச் சட்டச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சவூதி சட்டத்தின் கீழ் தூதரக வழிகள் மற்றும் அனைத்து சாத்தியமான இராஜதந்திர வழிமுறைகளையும் அரசு ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது, சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கோருதல், மன்னிப்பு பெறுதல், தண்டனையைக் குறைத்தல் அல்லது சவூதி சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய பிற நிவாரணங்களைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.