;
Athirady Tamil News

எல் நினோ தாக்கம்.., 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

0

எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழக்க வாய்ப்புள்ளதாக க்ளைமேட் இம்பாக்ட் லேப் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த தீவிர வெப்ப மாறுபாடு, புவி வெப்பமயமாதலுடன் இணைந்து சூப்பர் எல் நினோவாக உருவெடுத்துள்ளது.

அதிக பாதிப்பு
ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட குளோபல் சவுத் நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் சாஹெல் பகுதியில் மட்டும் சுமார் 66,800 கூடுதல் வெப்ப உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா(31,320), இந்தோனேசியா(19,251) மற்றும் சூடான்(17,430) ஆகிய நாடுகள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளன.

இந்தியாவிலும் வெப்பம்
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவிலும் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 2027 வரை இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 கூடுதல் வெப்ப உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலமாக இருக்கும் நிலையில், இந்த முறை அதிக வெப்பநிலை நிலவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பு எதிர்கால புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெப்ப அலைகள் மட்டுமின்றி, வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் விவசாய உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குளிரூட்டும் மையங்களை அமைத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்புற வேலை நேரத்தை முறைப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.