;
Athirady Tamil News

விமானம் பறந்து கொண்டிருக்கும்போது துணை விமானி செய்த அதிர்ச்சி செயல்…ஸ்மித் மச்சார் கூறிய பரபரப்பு தகவல்

0

துணை விமானியின் தாக்குதலில் கண்பார்வை மங்கியது, முழு பலத்தையும் திரட்டி விமானி அறை கதவை திறந்தேன் என ஸ்மித் மச்சார் கூறியுள்ளார்.

துபாயில் இருந்து 174 பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த 30-ந்தேதி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் விமானியான இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் குத்தியதாக தெரிகிறது.

அத்துடன் விமானத்தையும் தரையில் மோதி தகர்க்க முயன்றார். இதனால் விமானம் 34 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 17 ஆயிரம் அடிக்கு மேல் கீழே வந்தது.

தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

எனினும் ரத்த வெள்ளத்தில் போராடிய விமானி ஸ்மித் மச்சார், காக்பிட்டை (விமானி அறை) திறந்து பயணிகளை உள்ளே வரவைத்து துணை விமானியை கட்டுப்படுத்தச் செய்தார். பின்னர் பயணிகள் உதவியுடன் விமானத் தையும் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கச்செய்தார்.

இதனால் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 182 பேரும் உயிர் தப்பி னர். துணை விமானியின் தாக்குதலில் காயமடைந்த ஸ்மித் மச்சார். அபுதா பியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நேற்று முன்தினம் பிரதமர் மோடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி, விமானத்தையும் பயணிகளையும் பாதுகாத்ததற்காக பாராட்டு தெரிவித்தார். இந்தசெயலால் தேசமே பெருமை கொள்வதாக புகழ்ந்தார்.

மேலும் இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய துணை விமானியை சவுதி அரேபியா அதிகாரிகள் கைது செய்து, அமீரக அரசிடம் ஒப்படைத்தனர்.

அமீரக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை

உலகை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமீரக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழுவினர் கைது செய்யப்பட்ட துணை விமானியிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிராத்தனை செய்ய நேரம் கேட்டார் துணை விமானி

இந்திய விமானி சுமித் சுமித் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, விமானி அறைக்குள் நடந்த சம்பவம் பற்றி கேட்டார். அப்போது அவரிடம் ஸ்மித் மச்சார் கூறியதாவது:-

துணை விமானி என்னிடம் பிரார்த்தனை செய்ய நேரம் கேட்டார். அங்குள்ள உள்ளூர் மக்கள் பலர் பிரார்த்தனை செய்வது வழக்கம். அது ஒன்றும் அசாதாரணமானதல்ல. அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, மரியாதை நிமித்தமாக நான் பின்னால் பார்க்காமல் முன்புறமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தலையின் பின்புறத்தில் பலமான அடி

சுமார் 4 அல்லது 5 நிமிடங்களுக்குப் பிறகு திடீரென்று என் தலையின் பின்புறத்தில் பலமான அடி விழுந்தது. முதலில் விமானத்திற்கு ஏதோ பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றே நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடர்ந்தன. அப்போதுதான் விமானத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. துணை விமானிதான் என்னை தாக்குகிறார் என்பதை உணர்ந்தேன்.

துணை விமானியை தடுக்கவும் எதிர்த்து போராடவும் முயன்றேன். ஆனால் ஆரம்பக்கட்ட தாக்குதல்களால் எனது பார்வை மங்கலாகி கிட்டத்தட்ட எதுவும் தெரியாத நிலை ஏற்பட்டது. நான் விமானத்தின் தரையில் கீழே விழுந்து கிடந்தேன். அந்தச் சமயத்தில் விமானம் செங்குத்தாகக் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் எனக்கு தோன்றிய அடுத்த எண்ணம் மற்றும் உணர்வாக இருந்தது.

துணை விமானி தடுத்தார்

விமானத்தின் அசைவு, காற்றின் சீறல் சத்தம் மற்றும் மக்களின் அலறல் ஆகியவற்றை நான் உணர்ந்தேன். உடனே விமானி அறையை கதவை திறக்க முயன்றேன். ஆனால் துணை விமானி கதவை மூடிவிட்டார்.

விமானி அறை கதவை வெளியில் இருந்து ஒரு குறியீட்டைப் பயன்படுத்தினால் மட்டுமே திறக்க முடியும். வெளியே இருந்த என் சக ஊழியர்கள் அந்த குறியீட்டை பயன்படுத்த முயன்றனர். ஆனால் அதை துணை விமானி தடுத்தார்.

கதவை திறக்காவிட்டால் இறந்து விடுவோம் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதைத் தனிப்பட்ட விஷயமாகவோ அல்லது மக்களுக்கானதாகவோ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அதுவே எனக்குள் எஞ்சியிருந்த கடைசிப் போராட்ட உணர்வை தூண்டியது.

முழு பலத்தை திரட்டி போராடினேன்

அப்போதுதான் நான் முழு பலத்தையும் திரட்டிப் போராடினேன். என்னிடம் இருந்த முழு ஆற்றலையும் திரட்டி கதவை நோக்கிச் சென்று அதை திறந்தேன். கதவைத் திறப்பதற்கு ஒரே வழி அதன் கைப்பிடியை அடைவதுதான். அது ஒரு சிறிய, விரைவான திருப்பம் தேவைப்படும் செயல், கைப்பிடியின் மீது என் கைகள் பட்டதும் அதைத் திருப்பி திறந்தேன். நல்ல வேளையாக பயணிகள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்வாறு சுமித் மச்சார் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகள் தங்கியிருந்த துணை விமானி

இஸ்ரேல் விமானத்தை கடத்த முயன்ற துணை விமானி ஹாம் அல்-ஹம்மாமி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஓமனை சேர்ந்த அவர் நீண்ட காலமாக சிரியாவில் இருந்ததும், அங்கு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் ஹமாம் அல்-ஹம்மாமி 2 ஆண்டுகள் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர் விசா வழங்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் பல்கலைக்கழக படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு 2015-ம் ஆண்டு வந்துள்ளார். 2017-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார். அந்த படிப்பை ஹமாம் அல் -ஹம்மாமி தொடரவில்லை. இதனையடுத்து 2019-ம் ஆண்டில் அவரது ஆஸ்திரேலிய மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு உளவு அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு முகமைகள், துணை விமானிக்கு ஆஸ்திரேலியாவுடனான தொடர்புகள் குறித்து விசாரித்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.