;
Athirady Tamil News

தாதிய உதவியாளர்களின் ஆடைச் சர்ச்சை மற்றும் ஹரீஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு(video)

0
video link-
 
 

தாதிய உதவியாளர்களின் ஆடைச் சர்ச்சை மற்றும் ஹரீஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு
அரசியல் கடந்து உரிமைக்காகச் சிவில் அமைப்புகளுடன் கைகோர்க்கப் போவதாக முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர். அமீர் எச்சரிக்கை

முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகவும் நியாயத்திற்காகவும் குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்களின் குரல்வளையை சட்ட நடவடிக்கைகள் மூலம் நசுக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும் கல்முனையில் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர்.

“எமக்கான சமூக நீதி எழட்டும்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை மயோன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான ஏ.ஆர். அமீர் தலைமையேற்று முதன்மை உரையாற்றினார்.

இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், விரிவுரையாளர் ஏ. கலீலுர்ரஹ்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உச்சபீட உறுப்பினரும் நற்பட்டிமுனை பிராந்திய அரசியல் செயற்பாட்டாளருமான யூ.எல். தௌபீக், எம்.எம். முஸ்தபா, பி.டி. ஜமால், மௌலவி ஜமால்டீன், ரைசுல் ஹக்கீம், கல்முனை வர்த்தகர் சங்கப் பிரதிநிதி ஜௌபர்  , ஆழ்கடல்   மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

ஏ.ஆர். அமீர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் நியமனம் மற்றும் அவர்களின் ஆடை (ஹிஜாப்) விவகாரத்தில் கடுமையான அநீதியும் கலாச்சார உரிமை மீறலும் இடம்பெற்றது. இந்நிலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் உடனடி நடவடிக்கை எடுத்து வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து தற்காலிகத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்.

இருப்பினும், முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுத்த அவரை இலக்கு வைத்து நீதிமன்ற வழக்குகள் தொடரப்படுவதும், முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துத் தெரிவித்த ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் சமூக செயற்பாட்டாளர்களின் குரல்வளையை அடக்கும் செயலாகும் எனச் சாடினார்.

நாட்டில் வாழும் 60 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தற்போதைய ஆட்சியாளர்களை நம்பி வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் முஸ்லிம் சமூகம் என்ற அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கவில்லை. அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட நியமிக்கப்படாமை தேசத்திலும் சர்வதேசத்திலும் பேசப்படும் பாரதூரமான குற்றமாகும்.

மேலும், புதிதாக நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் கூட சிங்கள மற்றும் தமிழ் பேசும் சமூகங்களை மட்டுமே முதன்மைப்படுத்திப் பேசுவதாகவும், தனியான கலாச்சாரத்தையும் மத உரிமைகளையும் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கான பூரண அங்கீகாரத்தை அரசும் எதிர்க்கட்சிகளும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தல் வேட்புமனு விவகாரத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கம் விடுவிக்கப்பட்டமையானது, தனிநபர் ஒருவருக்குச் செய்யப்பட்ட அநீதியை விட, கல்முனை மண்ணுக்கும் அதன் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட வரலாற்றுத் துரோகமாகும்.

இதன் வடுக்களையும் வலிகளையும் கல்முனை மக்கள் இன்றும் சுமக்கின்றனர். முஸ்லிம் கட்சித் தலைமைத்துவமும் இந்தத் தவறை ஒரு குற்ற உணர்வோடு உணர்ந்துள்ள போதிலும், அதற்கான முறையான பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் மருதமுனையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு மற்றும் கல்முனைப் பிராந்தியச் சட்டத்தரணிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்படும் முஸ்லிம்களுக்காகவும், கல்முனைப் பிராந்தியத்தின் நிலுவையிலுள்ள அபிவிருத்தி மற்றும் எல்லை விவகாரங்களுக்காகவும் முன்வந்து வழக்காட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக மற்றும் மீனவர் சங்கங்களை ஒன்றிணைத்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், சட்டரீதியான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள ஆறு பேரின் நியாயமான தீர்வுக்காகவும் வீரியமிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இச்சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.