;
Athirady Tamil News

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களின் பணி அனுமதி விதிகளில் டிரம்ப் அதிரடி மாற்றம்

0

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள், எச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் அடைக்கலம் கோருவோரின் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கக்கூடிய புதிய பணி அனுமதி விதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை, பணி அனுமதிச் சான்றிதழைப் புதுப்பிக்க விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அதிகபட்சமாக 540 நாட்கள் வரை தானியங்கி முறையில் பணி அனுமதி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, பணி அனுமதிப் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும்போது வெளிநாட்டவர்கள் வேலை இழப்பதைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில், புதிய விதியின்படி, பணி அனுமதிப் புதுப்பிப்புக்காக விண்ணப்பித்தவர்கள், தங்களுக்கான அனுமதி அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் வரை தொடர்ந்து வேலை செய்வதற்கான தானியங்கி நீட்டிப்பைப் பெற முடியாது.

கடந்த ஆண்டு தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாற்றம், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தற்போது இறுதி விதியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பணி அனுமதிப் புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கு இந்தப் புதிய விதி பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால், பணி அனுமதிப் புதுப்பிப்புக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக நிர்வாக நடைமுறைகளில் தாமதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தங்களது வேலைவாய்ப்பைத் தொடர்வதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.