வீதி விபத்துகளை தடுக்க புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான பணி !!
யாழ் புங்குடுதீவு 11 ம் வட்டாரம் பசுபதிப்பிள்ளை வீதியிலும் அவ்வீதியின் ஊடாக செல்கின்ற ஒழுங்கையொன்றும் புங்குடுதீவு ஜே / 25 கிராம சேவகர் பிரிவுக்கான கிராம முன்னேற்ற சங்கத்தின் ( RDS ) வேண்டுகோளுக்கிணங்க சுவிஸ் – புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிதியுதவியில் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
முன்னைநாள் புங்குடுதீவு கிராம சபையின் ( VC) தலைவராகவும், புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம் மற்றும் புங்குடுதீவு பராசக்தி வித்தியாசாலை ஆகியவற்றின் நிறுவுனராகவும் செயலாற்றிய உயர்திரு. வ. பசுபதிப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த இந்த வீதியானது பசுபதிப்பிள்ளை வீதி என்று அழைக்கப்படுகின்றது. இவரின் புதல்வர் ப. கதிரவேலு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பிரபல சட்டத்தரணியாக விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கணேச மகா வித்தியாலயத்தின் முன்பாக ஆரம்பமாகின்ற இந்த வீதியில் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறாக இரு பக்கமும் பற்றைகள் காணப்பட்டதால் பல வாகன விபத்துக்களும் ஏற்பட்டிருந்த நிலையில் கிராம முன்னேற்ற சங்கத்தினரிடம் பொதுமக்கள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு இந்த வீதியூடாக செல்கின்ற ஒழுங்கையொன்றும் பற்றைகளால் முழுமையாக சூழப்பட்டிருந்தமையால் போக்குவரத்து மேற்கொள்வது மிகவும் சிரமமாக காணப்பட்டதாலும் குறித்த ஒழுங்கையும் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிரமதானப் பணிகளில் ஜே /25 கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கருணாகரன் குணாளன், உப தலைவர் நா. சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர் திருலங்கன் சஜீத்தன் மற்றும் பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
