;
Athirady Tamil News

வட மாகாண முஸ்லிம்களின் ‘கருப்பு ஒக்டோபர்’ 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  

0

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு இன்று (30) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் ஹாமீம் கல்வி நிலையத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான இந்நினைவேந்தல் நிகழ்வு, யாழ் சகோதரத்துவ அமைப்பின் ஸரபுல் அனான் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வடமாகாணத்திலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். யாழ் முஸ்லிம்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு, கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த இனச்சுத்திகரிப்பின் துயர வடுவிற்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளியேற்றத்தின் போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வரலாற்றுத் துயரை நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக   பிரான்சில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் அமீன் ஆஷிக்,ஊடகவியலாளரும் ஆய்வாளரும் தோழர் ஸ்டாலின் முன்னாள் யாழ் மாநகர சபை இலங்கைத் தமிழரசுத் கட்சி உறுப்பினர் நிபாஹிர் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் தோழர் கமல், தோழர் ஜீவன்  தொழிலதிபர் சகோதரர் தாஹிர் எக்ஸத் ஊடகப் பிரிவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

வரலாற்றுத் துயரினை நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் கருத்துரைகள் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.