;
Athirady Tamil News

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆகும் தமிழ்ப்பெண் நித்யா ராமன்?

0

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மேயராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய மேயர் கரேன் பாஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகர கவுன்சில் உறுப்பினர் நித்யா ராமன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் கரேன் பாஸ் முன்னிலையில் இருந்தார். பின்னர் அடுத்தடுத்த வாக்குகள் எண்ணப்பட்டபோது நித்யா ராமன் முன்னேறி, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளன. இதனால் இறுதி முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

யார் இந்த நித்யா ராமன்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன், சென்னையில் பிறந்தவர். நகர்ப்புற திட்டமிடலில் கல்வி பயின்ற இவர், கடந்த 2020-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தற்போது மேயர் தேர்தலில் போட்டியிடும் அவர், வீட்டு வசதி, வீடற்றவர்களின் பிரச்சினை, நகரின் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பிரசாரம் செய்தார்.

ஏற்கனவே நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது நித்யா ராமனும் முன்னிலை பெற்றிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலின் இறுதி முடிவு வெளியாகும் வரை நித்யா ராமனின் வெற்றி உறுதி செய்யப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.