;
Athirady Tamil News

ஏமன் மீது சவுதி வான்வழி தாக்குதல் – 4 பேர் பலி

0

சனா,

ஏமன் மீது சவுதி நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

 

ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 

தீவிரமடையும் மோதல்

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

4 பேர் பலி

இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ், சனா நகரங்கள் மீது சவுதி அரேபியா நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, சவுதி அரேபியா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நேபாளத்தை சேர்ந்த ஊழியர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.