மூன்று தசாப்த காலக் காத்திருப்புக்கு பலன் தகரக் கொட்டகைகளிலிருந்து நிரந்தர வீடுகளுக்குக் குடிபுகும் வலிகாமம் மக்கள்!
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலிட்டி மற்றும் பலாலி அண்டனிபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வாழ்ந்த மூன்று குடும்பங்களுக்குப் பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடுகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க கையளித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நன்னடத்தை பராமரிப்பிலிருந்து வெளியேறும் சிறார்களுக்கு 20 இலட்சம் ரூபா வீதம் 49 வீடுகள் வழங்கப்பட்டு, முதற்கட்டமாகச் சாவகச்சேரியில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜினால் வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இ லங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாகத் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, 36 ஆண்டுகளுக்கும் மேலாக நலன்புரி முகாம்களிலும், உறவினர் மற்றும் வாடகை வீடுகளிலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த வலிகாமம் வடக்கு மக்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறி வருகின்றனர். தகரக் கொட்டகைகளுக்குள் முடங்கிக்கிடந்த இம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீசும் வகையில், அரசாங்கத்தினால் துரிதகதியில் முன்னெடுக்கப்படும் நிரந்தர வீட்டுத் திட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த நிலையில், வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஒரே இரவில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின. உடுத்த உடையுடன், ஓரிரு நாட்களில் மீண்டும் வீடு திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வெளியேறியவர்கள், தமது செழிப்பான விவசாய நிலங்களையும் கடற்றொழில் வாழ்வாதாரங்களையும் இழந்து நிர்க்கதியானார்கள். இப்பிரதேசங்கள் ‘உயர் பாதுகாப்பு வலயமாக’ பிரகடனப்படுத்தப்பட்டதால், ஒரு தலைமுறை கடந்தும் அவர்களால் சொந்த மண்ணில் கால்பதிக்க முடியவில்லை. இடம்பெயர்ந்தபோது சிறுவர்களாக இருந்தவர்கள் நடுத்தர வயதை எட்டியதும், முதியவர்கள் தமது சொந்த மண்ணை மீண்டும் காணாமலேயே உயிர்நீத்ததும், முகாம்களிலேயே பிறந்து வளர்ந்த தலைமுறையினர் சொந்த மண் வாசனையையே அறியாதிருந்ததும் இம்மக்களின் வரலாற்றில் ஆறாத வடுக்களாகப் பதிந்துள்ளன. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர், “சொந்த மண்ணில் குடியேற்று” என்ற கோஷத்துடன் 2011ஆம் ஆண்டு முதல் இம்மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.
யுத்தத்திற்குப் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாகக் காணிகளை விடுவித்தாலும், அவை முழுமையான தீர்வாக அமையவில்லை. 2010 முதல் 2015 வரையான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் யாழ். மாவட்டத்தில் சுமார் 18,514 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. எனினும், 2013 ஏப்ரல் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி (இல. 1807/16) மூலம் வலி. வடக்கில் சுமார் 6,381 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகிப் பாரிய எதிர்ப்புகளைத் தூண்டியது. கடந்த 13 ஆண்டுகளில் இதில் சுமார் 4,300 ஏக்கர் விடுவிக்கப்பட்டாலும், குறித்த வர்த்தமானி அறிவிப்பை முழுமையாக இரத்துச் செய்யுமாறு மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
2016 முதல் 2024 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன காலத்தில் 2,293 ஏக்கரும், கோட்டாபய ராஜபக்ச காலத்தில் காணிகள் எவையும் விடுவிக்கப்படாமலும் ரணில் விக்கிரமசிங்க காலத்தில் 412 ஏக்கரும் விடுவிக்கப்பட்டன. தற்போது “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதியுடன் 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தில், மக்களின் பெருமளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், யாழ். மாவட்டத்தில் இன்னும் சுமார் 2,570 ஏக்கர் காணிகளும், அதில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் சுமார் 2,030 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. எஞ்சிய காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், பலாலி மற்றும் வசாவிளான் மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 20 இலட்சம் ரூபாய் வீட்டுத் திட்டம் முன்மொழியப்பட்டு அதன் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டாலும், “காணியில் கொட்டில் அமைத்து நிரந்தரமாகத் தங்கினால் மட்டுமே வீட்டுத் திட்டம் வழங்கப்படும்” போன்ற நடைமுறைச் சிக்கல்களால் பலர் மீள்குடியேறத் தயங்கினர். ஆனால், தற்போதைய அரசாங்கம் இத்தடைகளை நீக்கி, யுத்தத்தால் வீடிழந்தவர்களுக்குச் சிறப்பான வீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வீட்டுத் திட்டங்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கமைய, வடக்கு மக்களுக்கான வீட்டுத் திட்ட நிதி 15 இலட்சத்திலிருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு யாழ். மாவட்டத்தில் 833 வீடுகளை நிர்மாணிக்க 1,666 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வலிகாமம் வடக்கில் மாத்திரம் 93 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையூடாக 341 குடும்பங்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபா வீதம் 341 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நன்னடத்தை பராமரிப்பிலிருந்து வெளியேறும் சிறார்களுக்கு 20 இலட்சம் ரூபா வீதம் 49 வீடுகள் வழங்கப்பட்டு, முதற்கட்டமாகச் சாவகச்சேரியில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜினால் வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலிட்டி மற்றும் பலாலி அண்டனிபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வாழ்ந்த மூன்று குடும்பங்களுக்குப் பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடுகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க கையளித்தார். அத்துடன், காணி வசதியற்ற குடும்பங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களை அமைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2028க்குள் நிரந்தரத் தீர்வு: அரசாங்கத்தின் இலக்கு
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 13,000 குடும்பங்களுக்கு 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.
இதனை உறுதிப்படுத்திய அமைச்சர் சுசில் ரணசிங்க, அடுத்த ஆண்டில் யாழ். மாவட்டத்திற்கு 1,600 முதல் 2,100 வீடுகள் வரை வழங்கப்படவுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் 2027ஆம் ஆண்டில் 5,000 வீடுகளும், 2028ஆம் ஆண்டில் 7,000 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு, 2028 டிசம்பருக்குள் வீடற்றோர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமப்புற மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து மேம்பாட்டிற்கும் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சொந்த மண்ணில் சொந்த வீடு என்பது வலிகாமம் மக்களின் மூன்று தசாப்த காலக் கனவாகும். தற்போதைய நில விடுவிப்பும், 20 இலட்சம் ரூபாய் வீட்டுத் திட்டங்களும் அவர்களின் சமூக, பொருளாதார நிலைத்தன்மைக்கு வலுவான அடித்தளமிட்டுள்ளன. எஞ்சியுள்ள காணிகளையும் முழுமையாக விடுவித்து, மீள்குடியேறிய மக்களின் பிரதான வாழ்வாதாரங்களான விவசாயம், கடற்றொழில் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்தும்போது, வலிகாமம் வடக்கு மீண்டும் யாழ்ப்பாணத்தின் செழிப்பான அடையாளமாகப் புதுப்பொலிவு பெறும் என்பது திண்ணம்.