;
Athirady Tamil News

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்த உத்தரவு, எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகத் தன்னைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது எனக் கூறி, ரிட் கட்டளையிடக் கோரி சுரேஷ் சலே வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (27) அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இந்த மனு அண்மையில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.

எனினும், இன்று வழக்கு அழைக்கப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், ஆசனத்தில் அமராத நிலையில், நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ உத்தரவை ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பலர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.