;
Athirady Tamil News

‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்ற 7 வயது சிறுமியின் தாய் – வரலாறு படைத்த ஜெனிபர் பாரெட்டோ

0

சான் ஜூவான்,

உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத் திய 75-வது பிரபஞ்ச அழகி போட்டி போர்ட்டோ ரிகோ நாட்டின் சான் ஜூவான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப் போட்டியின், இறுதியில், சொந்த நாடான போர்ட்டோ ரிகோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ 2026-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.

மாற்றப்பட்ட விதிமுறை…

ஜெனிபர் பாரெட்டோவுக்கு திருமணமாகி, 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு தாய் இப்பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபஞ்ச அழகி போட்டியில், 18 முதல் 28 வயதுக்குட்பட்ட, திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி இருந்தது.

ஆனால், 2023-ம் ஆண்டு முதல், திருமணமான பெண்கள், விவாகரத்து ஆனவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் இப்போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதால், ஒரு குழந்தைக்கு தாயான ஜெனிபர் பாரெட்டோ தற்போது மகுடம் சூடியுள்ளார். இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் தாய் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

உணவுக் கட்டுப்பாடு

முன்னதாக இப்போட்டிக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள, பிடித்த உணவுகளைத் தவிர்க்காமல் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் ஓராண்டில் 31 கிலோ உடல் எடையைக் குறைத்ததாக ஜெனிபர் பாரெட்டோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய அழகிக்கு ஏமாற்றம்

இதற்கிடையே, இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த 19 வயது சட்டக் கல்லூரி மாணவி காசியா லிஸ் மெஜோ, முதல் 30 இடங்களுக்குள் முன்னேறிய நிலையில், அடுத்த சுற்றான டாப்-12 இடங்களுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.