;
Athirady Tamil News

போரினால் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் ஆய்வு..!!

0

30.5.2022

04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் உள்ள அனைத்து முக்கியமான உள்கட்டமைப்புகளும் ரஷிய படையெடுப்பால் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இடைவிடாத பீரங்கித் தாக்குதல்களை நடத்தி 90 சதவீத கட்டிடங்களை ரஷிய படையினர் சேதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

01.30: கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய மற்றும் உக்ரைன் படைகள் தீவிர போரில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் படைகளை எதிர்கொள்ளும் வகையில் ரஷிய வீரர்கள் தீவிர வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

12.10: ரஷிய அதிபர் புதின், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக்வுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா, செர்பியாவுக்கு இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் இரு நாடுகளும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் என்றும் இரு தலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

29.5.2022

18:30: டான்பாசை கைப்பற்றுவதற்கான போரில் ரஷிய படைகள் முக்கிய நகரங்களான செவரோடோனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் பகுதிகளில் பிடியை இறுக்குகிறது. லிசிசான்ஸ்க்கில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கெய்டே கூறி உள்ளார்.

18:00: இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போதைய நிலைமை மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டார். குறிப்பாக டான்பாஸ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் உள்ள சில பகுதிகளை விரைவில் பிடிக்க ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக கூறினார்.

17:00: உக்ரைனில் இருந்து போலந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவி வழங்குவதற்காக போலந்தில் தனது நடவடிக்கைகளை ஐ.நா. அகதிகள் அமைப்பு விரிவுபடுத்துகிறது.

உக்ரைனில் இருந்து அகதிகள் வரும் முக்கிய நாடாக போலந்து உள்ளது. பிப்ரவரி 24ல் போர் தொடங்கியதில் இருந்து 35 லட்சத்துக்கும் அதிகமானோர் போலந்திற்குள் நுழைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 100,000 க்கும் அதிகமான மக்கள் வந்தனர். அதன்பின்னர் படிப்படியாக குறைந்து மே மாதத்தில் தினசரி சுமார் 20,000 பேர் என்ற அளவிற்கு வந்துள்ளனர்.

15.00: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், அவர் கூறுகையில், பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்துவது, எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைனுக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.

10.50: உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார்.

அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதின் அதனை உடனே நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளின் நிலைமை மேலும் சீர்குலையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

04.30: உக்ரைன் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க நட்பு நாடுகள் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் எதிரியை விட அதிகமாக பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.35: கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ளன. அங்குள்ள லைமன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. மேலும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ் புறநகர் பகுதியில் இருந்து ரஷியப் படைகளை விரட்ட தீவிரமாக போரிட்டு வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

01.40: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலைப்பகுதியில் உள்ள 2,500 உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.30: கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார். உலக கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை ரஷியாவும் உக்ரைனும் வழங்கி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.