;
Athirady Tamil News

நல்லூர் ஆலய சூழலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை குற்றச்சாட்டுகளின் கீழ் கைது!!

0

யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் நல்லூர் ஆலய சூழலில் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்கள் , ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் என ஐவர் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது .

கைக்குழந்தை உள்ளிட்ட 7 சிறுவர்கள் இன்றைய தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா , நாளைய தினம் அவர்களை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் பாரப்படுத்துவதற்காக மன்றில் முற்படுத்த கட்டளையிட்டார் .

யாழ்ப்பாணம் மாநகர் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் , சிறுவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டு ஊதுபத்தி வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று பல முறைப்பாடுகள் வழங்கப்பட்ட போதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை .

இந்த விடயம் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உத்தரவில் நேற்றைய தினம் 3 பெண்கள் , ஆண் ஒருவர் மற்றும் விடுதி உரிமையாளர் என ஐவர் கைது செய்யப்பட்டனர் .

அவர்களின் பாதுகாப்பிலிருந்த கைக்குழந்தை உள்பட 8 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டனர் .

அவர்கள் அனைவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர் .

சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர் , 3 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார் .

கைக்குழந்தையை தாயாருடன் இருக்க அனுமதித்த மன்று சிறுவர்களை இன்றைய தினம் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டது .

அத்துடன் நாளைய தினம் சிறுவர்களை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க மன்றில் முற்படுத்துமாறு நீதிவான் கட்டளையிட்டார் .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.