;
Athirady Tamil News

இந்தோனேஷியா சீற்றத்துடன் எரிமலை ; மக்கள் வெளியேற்றம்

0

இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.

ஆச்சே மாகாணத்தில் பெனர் மெரியா மாவட்டத்தில் 8,600 அடி உயரமுள்ள பர்னி தெலோங் எரிமலையில், நேற்று முன்தினம் ஏழு முறை பலத்த அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த அதிர்வு, 5 கி.மீ. துாரம் வரை உணரப்பட்டது. கடந்த ஜூலை முதல் இதன் செயல்பாடு அதிகரித்து வந்த நிலையில், சில மாதங்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் எரிமலை வெடித்து சிதறலாம் என அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பர்னி தெலோங் எரிமலையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.