;
Athirady Tamil News

‘காதலை ஏற்க மறுத்ததால் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தேன்’ கைதான சதீஷ் வாக்குமூலம்..!!

0

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், நீண்ட விடுப்பில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இவர்களது மூத்த மகள் சத்யா (வயது 20), தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் சதீஷ் (23) என்பவரை காதலித்து வந்தார்.

பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ், சத்யாவிடம் தனது காதலை ஏற்க வைப்பதற்காக போராடினார். எவ்வளவு முயன்றும் முடியாத நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரெயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார்.

கைது
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷை, நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். விடிய விடிய அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரது வாக்குமூலம் வருமாறு:- எனது வீட்டின் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் சத்யா, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் சத்யாவை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளியில் படிக்கும்போதே சத்யாவிடம் பேசுவேன். சத்யாவின் தாயார் ராமலட்சுமி, ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்ததால் அவரையும் எனக்கு நன்றாக தெரியும். நானும், போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரும் என்னிடம் அன்பாக பேசுவார்.

அக்கறையோடு பேசினேன்
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது சத்யா மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவரை பின்தொடர்ந்து வந்தேன். ஒருநாள் சத்யாவிடம் அவரது செல்போன் நம்பரை கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்து விட்டார்.

இதன்பின்பு அவரது தோழிகள் மூலம் சத்யாவின் செல்போன் நம்பரை வாங்கி அவரிடம் பேசி எனது காதலை வெளிப்படுத்தினேன். அந்த சமயத்தில் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர் தியாகராயநகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அப்போது முதல் அவர் வீட்டில் இருந்து தனியாக பரங்கிமலை ரெயில்நிலையம் வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்று வந்தார். நானும் பரங்கிமலை ரெயில்நிலையம் வந்து அவரிடம் பேசுவேன். படிப்பு மற்றும் குடும்பம் குறித்து அவரிடம் அக்கறையோடு பேசி வந்தேன்.

பெற்றோர் கண்டிப்பு
இதனால் சத்யாவுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், எனது காதலை ஏற்றுக்கொண்டார். இதன்பின்பு கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்யாவை சந்தித்து பேசி வந்தேன். சில நாட்கள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சத்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கல்லூரியில் விட்டு வந்துள்ளேன். கல்லூரி முடிந்த பின்பும் சில நாட்கள் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகே விட்டு சென்றுள்ளேன்.

இருவரும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தது சத்யாவின் தாயார் ராமலட்சுமிக்கு தெரியவந்தது. அதேவேளையில் ராமலட்சுமியிடம் என்னைப்பற்றி சிலர் தவறான தகவல்களை கூறி உள்ளனர். இதனால் சத்யாவை, அவரது தாயார் கண்டித்துள்ளார்.

சாவதை தவிர வழியில்லை
இதனை சத்யா என்னிடம் தெரிவித்தார். இருந்தபோதிலும் என்னுடன் சத்யா தொடர்ந்து பேசி வந்தார். இதன்பின்பும், சில நாட்கள் சத்யாவை கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளேன். இந்த தகவலும் சத்யாவின் தாயார் ராமலட்சுமியின் காதுக்கு எட்டியது. இதனால் அவர் சத்யாவை கடுமையாக திட்டியதுடன், ‘இனிமேல் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம்…. உனது செயலால் நமது குடும்ப மானம் கப்பலேறி விடும்’ என எச்சரித்து உள்ளார். மேலும், என்னைப்பற்றி சிலர் தெரிவித்த தவறான தகவலையும் சுட்டிக்காட்டி, இதையெல்லாம் மனதில் கொண்டு செயல்படாமல் தொடர்ந்து தவறு செய்தால் சாவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

குடும்பம் தான் முக்கியம்
இதை என்னிடம் வெளிப்படையாக தெரிவித்த சத்யா, ‘இனிமேல் என்னுடன் பேச வேண்டாம். எனக்கு எனது பெற்றோர் மற்றும் குடும்பம் தான் முக்கியம்’ என திட்டவட்டமாக கூறினார். இதைக்கேட்ட நான், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இருந்தபோதிலும் எனது தரப்பு விளக்கத்தை கூறி காதலை ஏற்க செய்ய அவரிடம் செல்போன் மூலம் பேச முயற்சி செய்தேன். ஆனால், அவர் எனது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ்-அப் மூலம் மெசேஜ் செய்தேன். வாட்ஸ்-அப் பதிவை அவரது செல்போனில் இருந்து நீக்கினார். இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் என்னை சமாதானப்படுத்தி கொண்டு அடுத்தகட்ட முயற்சியில் இறங்கினேன். அவரது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். அதையும் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்ட போதும் அழைப்பை ஏற்கவில்லை.

அழுதேன்
ஒருகட்டத்தில் சத்யாவிடம் இருந்த செல்போனை அவரது பெற்றோர் வாங்கி வைத்துக்கொண்டது தெரியவந்தது. நான் சத்யாவிடம் பேசி விடக்கூடாது என்பதற்காக, சத்யாவை அவரது பெற்றோர் தினமும் வீட்டில் இருந்து ரெயில் நிலையத்தில் விடுவதும், கல்லூரி முடிந்த பின்பு ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர். இதனால் சத்யாவிடம் நேரில் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். கடந்த 6 மாதத்துக்கு முன்பு சத்யா படிக்கும் கல்லூரிக்கு சென்று, ‘நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய். நீ இல்லை என்றால் நான் இல்லை….’ என்று கூறி அழுதேன். அப்போதும் அவர் பேசாததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சத்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, சத்யாவை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாக என் மீது அவரது பெற்றோர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

செவிசாய்க்கவில்லை
அந்த புகாரின் பேரில் என்னையும், எனது தந்தையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். இதன்பின்பு, ‘இனிமேல் சத்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என எழுதி வாங்கி அனுப்பிவைத்தனர். இதன் பின்பும் சத்யாவை சமாதானம் செய்து தனது காதலை ஏற்க வைக்கும் முயற்சியை நான் கைவிடவில்லை. சத்யாவின் தோழிகள் மூலம் பேச முயற்சித்தேன். அப்போதும் அவர், தன்னுடனான உறவை முறித்துக்கொண்டு விட்டதாகவும், தன்னுடன் பேச முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியதாக அவரது தோழிகள் தெரிவித்தனர். பலமுறை நேரில் பேச முயன்ற போதும் அதற்கு சத்யா செவிசாய்க்கவில்லை. என்னை விட்டு முழுமையாக விலக சத்யா முடிவு செய்ததை அறிந்து மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

விரைவில் நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் தான் சத்யாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தது தெரியவந்தது. என்ஜினீயர் மாப்பிள்ளைக்கு சத்யாவை திருமணம் செய்து வைக்க பேசி முடித்துள்ளதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன். சத்யாவை என்னால் மறக்க முடியாததால் கடைசியாக ஒருமுறை அவரை நேரில் சந்தித்து காதலை ஏற்கும்படி சமாதானம் பேசலாம் என கருதி நேற்று முன்தினம் பரங்கிமலை ரெயில் நிலையம் சென்றேன். அப்போது சத்யா, தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அவரது அருகில் சென்று பேசினேன். ‘வேலைக்கு சென்று உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னை முழுமையாக நம்பு’ என கெஞ்சினேன். எதற்கும் சத்யா மசியவில்லை.

கோபம் தலைக்கேறியது
என்னை உதாசீனப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டார். இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பல நாட்கள் பின்தொடர்ந்து சென்ற போதிலும், நமது காதலை ஏற்க மறுக்கிறாரே என்கிற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. கோபம் தலைக்கேறிய நிலையில், நமக்கு கிடைக்காத சத்யா, வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது என்ற எண்ணம் மனதில் உதித்தது.

எட்டி உதைத்து தள்ளினேன்
அந்த சமயத்தில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. சத்யா நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே வந்தபோது, கடும் ஆத்திரத்தில் இருந்த நான் அவரை காலால் எட்டி உதைத்து ரெயில் முன்பு தள்ளினேன். இதில், அவர் ரெயிலுக்குள் சிக்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் அய்யோ…அம்மா என கூச்சலிட்டனர். பயணிகள் கூட்டம் கூடியதாலும், சிலர் என்னை பிடிக்க முயன்றதாலும் அங்கிருந்து தப்பி ஒடினேன். எங்கு செல்வது என தெரியாமல் துரைப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த என்னை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கைதான சதீஷ், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.