;
Athirady Tamil News

இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்!!

0

பூமியின் நிலம் மற்றும் பனி படர்ந்த பகுதிகளை விரிவாக ஆய்வு செய்ய உதவும் வகையில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கிய நிசார் புவி கண்காணிப்பு செயற்கைகோள் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தை கணிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் இணைந்து நாசா-இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார் (நிசார்) எனும் செயற்கைகோளை உருவாக்கி உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இதற்கான ஒப்பந்தத்தின் படி, வாஷிங்டனில் உள்ள நாசாவின் ஜெட் ப்ரபல்சன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) 2,800 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேபிஎல் உருவாக்கிய எல்-பேண்ட் பேலோடுடன் ஒருங்கிணைக்க, இஸ்ரோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதன் எஸ்-பேண்ட் எஸ்ஏஆர் பேலோடை நாசாவுக்கு அனுப்பியது. தற்போது தயார் நிலையில் உள்ள இந்த செயற்கைகோள் இந்தியாவில் ஹரிகோட்டாவில் இருந்து வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, நிசார் செயற்கைகோள் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு முன்பாக, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், நாசா ஆய்வகத்தில் உள்ள செயற்கைகோளை இறுதிகட்டமாக நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, செயற்கைகோளை இந்தியாவுக்கு வழியனுப்புவதற்கான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாதிரி செயற்கைகோள் முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தேங்காய் உடைத்தனர். செயற்கைகோள் ஏவும் போது சாப்பிடுவதற்கான அதிர்ஷ்ட வேர்கடலை அடங்கிய ஜாடியை இஸ்ரோ பிரதிநிதிகளுக்கு நாசா விஞ்ஞானிகள் வழங்கினர்.

எஸ்யுவி கார் அளவிலான நிசார் செயற்கைகோள், சிறப்பு கன்டெய்னரில் பத்திரமாக அடைக்கப்பட்டு 14,000 கிமீ விமானம் மூலம் பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்திற்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.