;
Athirady Tamil News

மாசிமக உற்சவத்தை முன்னிட்டு கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்!!

0

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பு மிக்கது. அதன்படி தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசிமகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். மாசிமகம் நட்சத்திர தினமான நேற்று மாசிமக உற்சவ விழா திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்தவாரிக்கு சென்றார். சாமி செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் போன்றவை வழங்கப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்த போது அருணாசலேஸ்வரரே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டு தோறும் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கரையில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி நேற்று கவுதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர். மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்களும் கவுதம நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்க தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான த.வேணுகோபால், துணைத்தலைவர் அ.அ.ராஜமாணிக்கம், செயலாளர் ரா.காளிதாஸ், துணை செயலாளர் நா.லட்சுமணன், பொருளாளர் மா.பன்னீர்செல்வம், சட்ட ஆலோசகர் நா.இளங்கோவன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் மாலை 6 மணிக்கு மேல் சாமிக்கு மகுடாபிஷேக விழா நடைபெற உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.