;
Athirady Tamil News

டெஹ்ரானில் ஈரான் மக்களை எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்

0

டெஹ்ரானின் மையப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்து 30 ஆயிரம் ஈரான் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13ஆம் திகதி இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

ஈரான் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டது.

அலை அலையாக ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை ஏவியது. இரு நாடுகளிடையே மோதல் தீவிரம் அடைந்திருப்பதால், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், 5 நாட்கள் கழித்து, இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி, டெஹ்ரானின் மையப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்து 30 ஆயிரம் ஈரான் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெஹ்ரான் மையப்பகுதியில், தொலைக்காட்சி நிலையம், பொலிஸ் தலைமையகம், 3 பெரிய மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன.

காசா, லெபனான் ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கும் இதேபோல் தாக்குதலுக்கு முன்பு எச்சரிக்கை விடுப்பது இஸ்ரேல் ராணுவத்தின் வழக்கம். மத்திய கிழக்கில் உள்ள பெரிய நகரங்களில் டெஹ்ரானும் ஒன்று. அங்கு 1 கோடி பேர் வசித்து வருகிறார்கள்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுப்பதற்குத்தான் ராணுவ மூத்த தளபதிகள், அணு விஞ்ஞானிகள், யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இ்ஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கிடையே, ஈரான் ராணுவ மூத்த தளபதி ஜெனரல் அலி சாட்மனியை கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

அவர் சமீபத்தில்தான் துணை ராணுவ புரட்சிப்படையின் அங்கமான காடம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக, டெஹ்ரான் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது. கடைகள் மூடிக்கிடந்தன.

பழமையான கிரான்ட் பஜார் மூடி இருந்தது. எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.