;
Athirady Tamil News

ஆந்திராவில் விற்கப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு- தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் 2 பேர் கைது!!

0

மகாராஷ்டிரா மாநிலம், பிரமணி மாவட்டம் பாலம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 17 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருந்தது. போலீசார் விசாரணையில் 2 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சங்கீதா ஆனந்த். இவர் மும்பையை சேர்ந்த ருக்சன் சந்த் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டை தானம் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். சங்கீதா தனது கணவரை சந்திக்க அடிக்கடி மும்பைக்கு சென்று வந்தார். அப்போது மகாராஷ்டிராவில் குழந்தைகளை கடத்தி விற்கும் சுல்தானா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுல்தானா கடத்தி வரப்படும் குழந்தைகளை விற்க இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி சங்கீதா தனக்கு தெரிந்த விஜயவாடாவை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பகடலாவை சேர்ந்த ஷிரவாணியை சந்தித்து குழந்தை இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டு கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதேபோல் ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.

வட்சவாய், தூக்கு பாலத்தில் 2 குழந்தைகளும், ஜக்கைய்யா பேட்டையில் ஒரு குழந்தையும், விசன்னானா பேட்டையில் ஒரு குழந்தையும், ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி சரண், சையத் சுபானி, சயத் அயன் ஆகிய 3 குழந்தைகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டதால் வழக்கு பதிவு செய்து பின்னர் குழந்தைகளை ஒப்படைக்கப்படும் என போலீசார் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் விற்பனை செய்ததாக தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் ஷிரவாணி, ஷில்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 5-ந்தேதி ஒரு சிறுவன் மற்றும் இரண்டு குழந்தைகள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டு மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஜக்கையா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கீதா, மும்பையை சேர்ந்த சுல்தானா ஆகியோரை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.