;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல் – தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர் மோடி!!

0

இந்திப்பட இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும் என கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், இந்தப் படம் கடும் எதிர்ப்புக்கு இடையே கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது.

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கோவையிலும் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இதுதொடர்பாக பல்லாரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்தப் படத்தை தான் தடைசெய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

இந்தப் படத்தை தடைசெய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தைப் பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.