;
Athirady Tamil News

1960-ம் ஆண்டு அமெரிக்காவில் இரவு விடுதிக்கு சென்ற வாஜ்பாய்- புதிய புத்தகத்தில் தகவல்!!

0

பா.ஜனதாவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், திருமணமே செய்து கொள்ளவில்லை. 3 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட வாஜ்பாயின் புதிய வாழ்க்கை வரலாற்று நூலை அபிஷேக் சவுத்ரி என்பவர் 2 தொகுதிகளாக எழுதி உள்ளார். ‘வாஜ்பாய்-அசென்ட் ஆப் ஹிண்டு ரைட்’ என்ற அந்த புத்தகத்தில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் சில பகுதிகள் வருமாறு:- கடந்த 1960-ம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜான் கென்னடியும், ரிச்சர்டு நிக்சனும் போட்டியிட்டனர். அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், அந்த தேர்தல் பிரசாரத்தின் பார்வையாளராக வாஜ்பாய் அமெரிக்கா சென்றார். அவரது முதலாவது வெளிநாட்டு பயணம் அதுவே ஆகும்.

1960-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அவர் அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார். ரெயில்வே தொழிலாளர்கள் நலனில் வாஜ்பாய்க்கு இருந்த அக்கறை காரணமாக அவர் அழைக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை எழுதியது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு சென்ற பிரதிநிதிகள் குழுவில் வாஜ்பாய் பெயரை அப்போதைய பிரதமர் நேரு சேர்த்ததும் இந்த பயணத்துக்கு ஒரு காரணம். ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இளம் ஐ.எப்.எஸ். அதிகாரி மகாராஜாகிருஷ்ணா ரஸ்கோத்ராவுடன் வாஜ்பாய் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார். நியூயார்க்கில் இருந்த பெரும்பாலான நேரங்களில் ரஸ்கோத்ராவுடன் இருந்தார். அப்போது இருவரும் 30 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.

ஐ.நா. தலைமையகத்தில் இல்லாத நேரங்களில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக்கு எழுதி அனுப்புவதும், நியூயார்க்கை சுற்றி பார்ப்பதுமாக வாஜ்பாய் நேரத்தை பிரித்துக்கொண்டார். அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார். ஆனால் அவையெல்லாம் வாஜ்பாய்க்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. சில நேரங்களில், இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார். ”அங்கு ஆடை அவிழ்ப்பு நடக்காது, நவீன இசையின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாம்” என்று ரஸ்கோத்ரா உறுதி அளித்தார். அதன்பிறகு, வாஜ்பாய் ஆர்வமாக இரவு விடுதிகளுக்கு சென்றார். இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.