;
Athirady Tamil News

இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்..!!!!

0

ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் வைத்துள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் கடந்த வாரமும் புதிய உருமாறிய தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.

போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று முந்தைய திரிபுகளை விட மிகவும் வீரியமானது என தெரிய வந்துள்ளது. எனவே இந்த வைரசை கவலைக்குரிய தொற்று பட்டியலில் சேர்த்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதற்கு ஒமிக்ரான் என பெயரும் சூட்டியுள்ளது.

இந்த வைரசுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் பல நாடுகளில் இந்த வைரஸ் தடம் பதித்து விட்டது.

அந்தவகையில், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், சீனா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் என அந்த பட்டியல் நீண்டு வருகிறது.

இந்த வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து உஷாரான மத்திய அரசு, ஒமிக்ரான் வைரஸ் எந்த வகையிலும் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக தொற்று கண்டறியப்பட்டு உள்ள நாடுகளை ஆபத்தான நாடுகளாக பட்டியலிட்டுள்ள அரசு, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளது.

இந்த வைரசால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கும் நிலையில், இதுவரை ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என்ற ஆறுதல் தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஒமிக்ரான் வைரஸ்

இது குறித்து மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதிய ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் இந்திய கொரோனா மரபணு ஆய்வு கூட்டமைப்பானது, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, சர்வதேச பயணிகளின் மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தொற்றுநோய்களுக்கு எதிராக சர்வதேச உடன்பாடு தேவை என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறுகையில், ‘மிகவும் பிறழ்ந்த ஒமிக்ரான் மாறுபாட்டின் தோற்றம், நமது நிலைமை எவ்வளவு ஆபத்தானது மற்றும் கையறு நிலையில் இருக்கிறது என்பதை நமக்கு காட்டியுள்ளது. உண்மையில், தொற்றுநோய்கள் விவகாரத்தில் உலகிற்கு ஏன் ஒரு புதிய ஒப்பந்தம் தேவை? என்பதை ஒமிக்ரான் உரக்க சொல்லி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தங்கள் நிலத்தை தாக்கும் தொற்று குறித்து பிற நாடுகளை எச்சரிப்பதில் இருந்து தற்போதைய அமைப்பு முறை தடுப்பதாக கூறிய கேப்ரியேசஸ், ஒமிக்ரான் தொற்றுக்காக போட்ஸ்வானா மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, அவர்களின் நடவடிக்கைக்காக பாராட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.