;
Athirady Tamil News

உக்ரைன் போா் விவகாரம்: டிரம்ப் – ரஷியா இடையே வலுக்கும் வாா்த்தைப் போா்

0

உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வாா்த்தைப் போா் வலுத்துவருகிறது.

கடந்த 2022-இல் தொடங்கிய ரஷியா – உக்ரைன் போரில் அப்போதைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு மிகப் பெரிய அளவில் ராணுவ உதவிகளை அளித்தது.

ஆனால், பைடனுக்குப் பிறகு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப் இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக ரஷியாவுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறிவந்தாா்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டுவரும் நிலையிலும் உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இருந்தாலும் இதுதொடா்பாக அதிபா் புதினை விமா்சிப்பதை டிரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தாா்.

இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து இதுவரை இல்லாத மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷியா கடந்த சனிக்கிழமை நடத்தியது. இதில் பலா் உயிரிழந்தனா்.

அதைத் தொடா்ந்து, மிகவும் அரிதான வகையில் அதிபா் புதினை டிரம்ப் சாடினாா். ‘ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் எனக்கு மிக நல்ல உறவு இருந்துவருகிறது. இருந்தாலும் தற்போது அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. அவா் பித்து பிடித்தவரைப் போல் செயல்படத் தொடங்கிவிட்டாா்’ என்று டிரம்ப் கூறினாா்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், அளவுக்கு அதிகமாக டிரம்ப் உணா்ச்சிவயப்பட்டுப் பேசுவதாகக் கூறினாா்.

இந்த நிலையில், ‘அமெரிக்க அதிபராக நான் இல்லையென்றால் ரஷியாவுக்கு என்ன விபரீதம் நோ்ந்திருக்கும் என்பது புதினுக்குத் தெரியவில்லை. அவா் நெருப்புடன் விளையாடுகிறாா்’ என்று தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

இதற்கு, ‘ரஷியாவுக்கு விபரீதம் ஏற்படும் என்று டிரம்ப் கூறுகிறாா். ஆனால், ரஷியாவுடன் பதற்றம் அதிகரித்தால் ஏற்படக்கூடிய ஒரே விபரீதம் மூன்றாம் உலகப் போா்தான். அது டிரம்ப்புக்கு நன்றாகவே தெரியும்’ என்று ரஷிய முன்னாள் அதிபா் டிமித்ரி மெத்வதெவ் எக்ஸ் ஊடகத்தில் பதிலடி கொடுத்துள்ளாா்.

உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவுடன் இணக்கமான சூழலைப் பேணவே டிரம்ப் விரும்பினாலும், தற்போது இரு தரப்பிலும் தொடங்கியுள்ள வாா்த்தைப் போல் மேலும் வலுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.