;
Athirady Tamil News

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

0

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஆர்வலரின் உடலை ஒப்படைக்க வேண்டுமென, அவரது தாய் உள்பட ஏராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு கரையில், பாலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான அவ்தாஹ் அல் ஹதாலின், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் ஒருவரால் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதாகவும், அவர்களது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, கொல்லப்பட்ட அவ்தாஹ் அல் ஹதாலினின், தாயார் கத்ரா ஹதாலின் (வயது 65) உள்பட 15 முதல் 70 வயதுக்குட்பட்ட ஏராளமான பெதூயின் பெண்கள், கருப்பு நிற உடை அணிந்து, அங்குள்ள குடிசையில் அமைதியாக அமர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டமானது, நேற்று (ஆக.5) 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவ்தாஹ் அல் ஹதாலினை அவரது பிறந்த ஊரான உம் அல்- கைரில் அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“அவ்தாஹ் அல் ஹதாலினுக்கு எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் மரியாதைக்குரிய இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுபோன்று, எங்களுக்கு நடக்க நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் எந்தவொரு தவறும் செய்யவில்லை” என அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, அவ்தாஹ் அல் ஹதாலினுக்கும், இஸ்ரேலைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர் யினோன் லெவி என்பவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின்போது, யினோன் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலைச் செய்தார். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவான விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இருப்பினும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட யினோனை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, இஸ்ரேலிய நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகளால் யினோன் மீது சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்ட அவ்தாஹ் அல் ஹதாலின், ஆஸ்கர் விருது வென்ற “நோ அதர் லேண்ட்” எனும் ஆவணப் படத்தின் இயக்குநர்களுடன் இணைந்து படப்பிடிப்பில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.