ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!
ஜம்மு – காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்காம் மாவட்டத்தின், அகால் தேவ்சார் வனப் பகுதியினுள் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்புப் படையினர் கடந்த 9 நாள்களாகத் தொடர் தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில், நேற்று (ஆக.8) நள்ளிரவு முதல் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில், 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த ராஷ்டிரியா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த கான்ஸ்டேபிள் ஹர்மிந்தர் சிங் மற்றும் லான்ஸ் நாயக் ப்ரீத்பால் சிங் ஆகியோர் பலியானதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஆக.1 ஆம் தேதி முதல் ஜம்மு – காஷ்மீரின் அடர்ந்த வனப் பகுதியினுள், பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, ஜம்மு – காஷ்மீர் காவல் துறை ஆகிய படைகள் இணைந்து தீவர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவம் தரப்பில் ருத்ரா ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் துணை ராணுவப்படையும் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.