ஆந்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து
ஆந்திரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்ததில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோத்தவலசா-கிரண்டுல் ரயில் பாதையின் தியாடா மற்றும் சிமிடிபள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாறை ஞாயிற்றுக்கிழமை உருண்டு விழுந்தது.
இந்த நிலையில் அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் விசாகப்பட்டினம் செல்லும் சரக்கு ரயில் பச்சேலியில் இருந்து வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் என்ஜினின் இரண்டு அச்சுகள் தடம்புரண்டதாக அதிகாரி கூறினார்.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் இன்று மாலைக்குள் ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே விபத்து காரணமாக விசாகப்பட்டினம்-கிரண்டுல் இடையே பயணிகள் ரயில் இருபுறமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.