;
Athirady Tamil News

எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவை

0

வறிய மக்களுக்கு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவது என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவைக்கு சமனாகும் – எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (16.12.2025) எழுவைதீவு கிராமிய செயலகத்தில் நடைபெற்றது.

இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய எண்ணக்கருவுக்கு அமைவாக, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவையினை ஒரே இடத்திலே வழங்குவதனை நோக்காக கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 3 நடமாடும் சேவையினை நடத்துவதற்கான தேவையுள்ளதாகவும், இலங்கையில் அதிக தீவுகளைக்கொண்ட மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக குறைந்த மக்கள் தொகையை கொண்ட தீவாக எழுவைதீவு பிரதேசம் காணப்படுவதாகவும், மக்களின் தேவை கருதி மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு சேவைவழங்குவதை நோக்காக கொண்டு இவ் நடமாடும் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும், இரு மாத்திற்கு ஒரு தடைவை எழுவை தீவு மற்றும் அனலை தீவு பிரதேசங்களக்கு மாவட்ட மட்ட உத்தியோகத்தரை அழைத்து வந்து மக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளருக்கு உள்ளதாகவும், சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரட்நாயக்க அவர்களின் ஏற்பாட்டில் தீவு பகுதிகளுக்கான போக்குவரத்து அபிவிருத்திககென 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாகவும், இதில் ஊர்காவற்றுறை பிரதேச அபிவிருத்திக்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது எனவும், எழுவை தீவிற்காக 3 வீதிகள் புனரமைப்பிற்காக 22 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுவருவதாகவும், இவ் வீதிகளை புனரமைப்பதற்கான முலப்பொருட்களை எழுவைதீவிற்கு எடுத்துவருவதில் சவாலக்ளை எதிர்நோக்கி வருவதாகவும், இதற்கு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதகாவும் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவதனால் எழுவைதீவை சுற்றாலாத் தலமாக மாற்றுவதற்கு திட்ட முன்மொழிவு கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,
இங்கு குறைந்தளவான வீடுகள் உள்ளன எனவும், நேரடியாக சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை அடைவதற்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதேச செயலளர் மற்றும் உத்தியோகத்தர்கள்கேட்டுக் கொண்டதுடன், மக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையாற்றியமைக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் வறிய மக்களுக்கு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவது என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவைக்கு சமனானதாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், துணி பை, முதியவர்களுக்கான அத்தியாவசியப் பொதிகள், மரக்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதுடன்,அரசாங்க அதிபரினால் மரக்கன்றும் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர், ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதேச இணைப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலகத்தினுடைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.