நிந்தவூர் பிரதேச சபையின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க உள்ளூராட்சி உதவி ஆணையாளர்க்கு அதிகாரம்ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் முறையாக நியமிக்கப்படும் வரை அல்லது தொடர்புடைய எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் நடைமுறை செயல்படுத்தப்படும் வரை, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு இதன் மூலம் அதிகாரம் அளிக்கிறேன்.
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 171(b) மற்றும் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவான ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 2 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 223 இன் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் டாக்டர். ஜயந்த லால் ரட்ணசேகர வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நிந்தவூர் பிரதேச சபையின் நிதி நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் தொடர்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளை, அந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு அமுல்படுத்துவதற்கு இதன் மூலம் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்க்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் பதவி காலியாக உள்ளதால்; 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66(G) இன் படி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.
இருப்பினும், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில், தேவையான சபைக் கூட்ட கோரம் இல்லை,
இதன் விளைவாக, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66(d)(3) இன் படி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க முடியவில்லை.
இதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்ததால், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனது,
இதனால் நிந்தவூர் பிரதேச சபை 2026 ஆம் ஆண்டுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து நிந்தவூர் பிரதேச சபை சார்பாக, கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை, நிந்தவூர் பிரதேச சபைக்கு தவிசாளர் முறையாக நியமிக்கப்படும் வரை அல்லது தொடர்புடைய எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் நடைமுறை செயல்படுத்தப்படும் வரை, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு இதன் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று முறை நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்றி காணப்பட்டமையினால் இதுவரை தெரிவு செய்யப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தி இருந்தார்.இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவித்தாட்சி அலுவலர் கடந்த 24ஆம் தேதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.அஸ்பர் ஜே.பி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள தவிசாளர் பதவிக்கு பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்துள்ள சட்டத்தரணி எம் ஐ. இர்பான் பதில் தவிசாளராக கடந்த திங்கட்கிழமை(10) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்று(21) நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
