;
Athirady Tamil News

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் – வெளியேற்ற முடியாமல் தவிப்பு

0

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஈரானுக்கு சொந்தமான IRIS BUSHEHR கப்பலின் பாதுகாப்புக்காக இன்னும் 15 ஈரானிய கடற்படை சிப்பாய்கள் கப்பலிலேயே தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பலில் இருந்த 219 ஈரானிய கடற்படை வீரர்களின் பாதுகாப்பு நிலை குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 5ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடற்படையினர் மீட்பு
கப்பலில் இருந்த வீரர்களில் 204 பேருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் தற்காலிகமாக வெலிசர கடற்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதனை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. நேற்று வரை கொழும்பு துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 15 முதல் 25ஆம் திகதி வரை இந்திய கடற்படையினர் நடத்திய போர்ப் பயிற்சியில் ஈரானிய அரசின் மூன்று போர்க்கப்பல்கள் பங்கேற்றன.

ராஜதந்திர முரண்பாடுகள்
பயிற்சி முடிந்து ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானிய அரசு மீது நடத்திய தாக்குதலில், பயிற்சியில் பங்கேற்ற IRIS DENA கப்பல் டொர்பிடோ தாக்குதலுக்கு உள்ளானது.

இத்தாக்குதலில் 84 ஈரானிய கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை ஈரானிய கப்பலுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.