;
Athirady Tamil News

நெதா்லாந்தில் யூதப் பள்ளி மீது வெடிகுண்டு தாக்குதல்

0

நெதா்லாந்து தலைநகா் ஆம்ஸ்டா்டாமில் உள்ள ஒரு யூதப் பள்ளி மீது சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். இதில் பள்ளியின் வெளிப்பக்கச் சுவா் மற்றும் மழைநீா் குழாய்கள் சேதமடைந்தன.

அதிருஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச்சேதம், காயங்கள் ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், நபா் ஒருவா் வெடிபொருளை வைத்துவிட்டுத் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ரோட்டா்டாம் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்துக்குத் தீவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆம்ஸ்டா்டாமிலும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது யூத சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இஸ்ரேல் ஈடுபட்டுள்ள மத்திய கிழக்கு போரின் பின்னணியில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறலாம் எனக் கருதப்படுவதால், நெதா்லாந்து முழுவதும் உள்ள யூதப் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், யூத சமூகத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இதுபோன்ற வன்முறைச் செயல்கள் கடும் கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.