;
Athirady Tamil News

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்.. பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

0

இஸ்லாமாபாத்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், “இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சூழலில், டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்.

இவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்றால், ஈரானில் நாம் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்துவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றோம். அது பேச்சுவார்த்தைக்கு உகந்த அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்களும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து நிறைவு செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மிகுந்த பணிவுடன் நான் அறிவிப்பது என்னவென்றால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த விவேகமான நடவடிக்கையை நான் மனதார வரவேற்பதோடு, இரு நாடுகளின் தலைமைகளுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒரு உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்காக, அவர்களின் தூதுக்குழுக்களை 2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அழைக்கிறேன்.

இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க ஞானத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். ‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்’ நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் இன்னும் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.