;
Athirady Tamil News

போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்

0

ஈரானுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையிலும், லெபனான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை என சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனானின் சிடோன் (Sidon) நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாக தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தடையின்றித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. சிடோன் பகுதியில் ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த காபி உணவகமாக இருந்த இடத்தைக் குறிவைத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் ஆறு வாரங்களாகத் தொடரும் இந்த மோதலில், அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹிஸ்புல்லா தரப்பினர் இதுவரை எல்லை தாண்டிய ஏவுகணைத் தாக்குதல்களையோ அல்லது இஸ்ரேலியப் படைகள் மீதான நேரடித் தாக்குதல்களையோ மேற்கொள்ளவில்லை.

அதேவேளை ஹிஸ்புல்லா தரப்பின் இந்த அமைதி ஒரு மூலோபாய நகர்வாகப் பார்க்கப்படும் நிலையில், அவர்கள் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.