பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 30 இற்கும் அதிகமானோர் பலி – பலுசிஸ்தான் விடுதலைப்படை பொறுப்பேற்பு!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் (Quetta) நேற்று தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈத் பண்டிகையை முன்னிட்டு குவெட்டா ராணுவ முகாமில் இருந்து பெஷாவர் நோக்கி வீரர்கள் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிவிபத்தின் தீவிரத்தால் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலைப்படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.