கொழும்பு தமிழ் இளைஞனை கடத்தி கொலை; ஐவர் கைது
கொழும்பை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை களனி கங்கையில் மூழ்கடித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கடத்தல் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பு-14, ப்ளூமெண்டல் வீதியை சேர்ந்த 19 வயதுடைய ஸ்ரீகாந்தன் பார்த்தீப்குமார் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
களனி கங்கையில் வீசப்பட்ட சடலம்
கடந்த 22ஆம் திகதி, சந்தேக நபர்கள் காரில் வந்து குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், மட்டக்குளி – தெல்கஹவத்தை சந்தியில் அமைந்துள்ள களனி கங்கையின் ஆற்றங்கரைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு , துணிப் பட்டியொன்றினால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர், கொலையை மறைப்பதற்காக சடலத்தை நீரில் மூழ்கடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.