;
Athirady Tamil News

நடுக்கடலில் ஆயுதமேந்திய கொள்ளை… அமெரிக்காவை கடுமையாக சாடிய ஈரான்

0

ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

ஆயுதமேந்திய கொள்ளை
குறித்த சம்பவத்திற்கு ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றியதுடன், இந்த நடவடிக்கையை நடுக்கடலில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளை என்று சாடியதுடன், அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டியது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இந்த நடவடிக்கை கடற்கொள்ளையைச் செயலளவில் அங்கீகரிப்பதாகக் கூறினார்.

கடல் நடுவே நடைபெறும் கடற்கொள்ளையையும் ஆயுதமேந்திய கொள்ளையையும் முழுமையாகச் சட்டப்பூர்வமாக்குவதே இது போன்ற நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்நடவடிக்கை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்று வலியுறுத்திய அமெரிக்க அதிகாரிகள், அக்குற்றச்சாட்டை மறுத்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட பிடியாணை
மேலும், மெஜஸ்டிக் எக்ஸ் மற்றும் டிஃபானி ஆகிய கப்பல்கள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிடியாணையின் கீழ் கைப்பற்றப்பட்டதாக கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க சட்டத்தரணி ஜீனைன் ஃபெரிஸ் பிரோ தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டபோது, ​​ஒவ்வொரு எண்ணெய்க் கப்பலும் சுமார் 19 லட்சம் பீப்பாய் ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மீதான தீவிர அளவிலான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக விவரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.