டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாசாவின் லான்ட்சாட் துறை மூலமாக பூமியின் இயற்கை புகைப்படங்களை செயற்கைக்கோள்கள் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன.
நமது பூமியின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த காடுகள், மலைகள், பாலைவனம் என கோடிக்கணக்கான புகைப்படங்களை நாசா வைத்துள்ளது.
இந்த நிலையில், ‘Your Name in Landsat’ (லான்ட்சாட்டில் உங்கள் பெயர்) என்ற தளத்தில் பயனர்கள் அவர்களின் பெயரையோ, அல்லது அவர்களின் பிரியமானவர்களின் பெயரையோ பதிவிட்டால், எழுத்து வடிவில் உள்ள பூமியின் இயற்கைப் புகைப்படங்களை தொகுத்து பெயராக மாற்றி பயனர்களுக்கு வழங்கும்.

எப்படி உபயோகிப்பது?
கூகுள் போன்ற தேடுதல் தளத்தில் ’Your Name in Landsat’ எனப் பதிவிட்டால், நேரடியாக நாசாவின் ’Your Name in Landsat’ என்ற தளத்துக்கு பயனர்களை கொண்டு செல்லும். (https://science.nasa.gov/specials/your-name-in-landsat/)
அதில், A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி பெயரை பதிவிட வேண்டும்.
பின்னர், நீங்கள் பதிவிடும் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் ஒத்திருக்கும் நிலவடிவங்களின் செயற்கைக்கோள் படங்களைத் தானாகவே தேடும்.
சில நொடிகளில், நீங்கள் பதிவிடும் பெயருக்கான முழு வரைப்படத்தையும் நாசா வழங்கும். அதனை பயனர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தற்போது உலகளவில் டிரெண்டிங்கில் இருக்கும் ‘Your Name in Landsat’ அம்சத்தை கோடிக்கணக்கானோர் ஆர்வத்துடன் அணுகி வருகிறார்கள்.