;
Athirady Tamil News

யாழில். ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி

0

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அம்பலவாணர் சோதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கஜானி பார்த்தீபனும், கெளரவ விருந்தினராக Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சியும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விருந்தினர்களால் கண்காட்சிக் கூடங்கள் நடாவினை வெட்டி ஆரம்பிக்கப்பட்டு பார்வையிடப்பட்டதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வு ஆரம்பமானது.

அதில், பிரதேச செயலக ரீதியாக நடைபெற்ற ஆடை வடிவமைப்பு, கேக் ஐஸ்சிங், அழகுக் கலை, அலங்கார பூக்கள் வடிவமைப்பு, சமையல் கலை உள்ளடங்களாக15 வகையான ஒரு வருட பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ள 237 மாணவர்களுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்களும், பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமாச் சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், உற்பத்தி பொருட்கள் போட்டியில் முதலாம் இடம் கோப்பாய் சரஸ்வதி தயாரிப்பு சங்கமும், இரண்டாவது இடம் காரைநகர் மத்திய மாதர் அபிவிருத்தி சங்கமும், மூன்றாம் இடம் கரவெட்டி இமையாணன் மத்திய கிராம அபிவிருத்தி சங்கமும் பரிசில்களை பெற்றுக்கொண்டதுடன், கண்காட்சியில் யாழ்ப்பாண பிரதேச செயலகம் அதிகளவில் பங்குபற்றியமைக்கான சிறப்புப் பரிசிலைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சி 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் கேக் ஐசிங் பயிற்சி நெறிக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.