பதவி இழப்பாரா பிரித்தானியப் பிரதமர்?
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் தொழிற் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பதவி விலகக் கோரும் குரல்கள் கட்சிக்குள் எழுந்துள்ளன.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தொழிற்கட்சி ஆட்சியமைத்தது. 14வருடங்களாக நீடித்த பழமைவாதக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அந்த வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்மர், தற்போது பொது மக்களின் செல்வாக்கை முற்றிலுமாக இழந்த ஒரு பிரதமராக விளங்குகிறார்.
தற்போதைய தேர்தல் பின்னடைவு மட்டுமன்றி காஸா யுத்தத்தில் இஸ்ரேலுக்கு வழங்கிய ஆதரவு, பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சட்டவிரோத குடியேற்றக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவு, எப்ஸ்டைன் விவகாரத்தில் சிக்கிய நபரை அமெரிக்காவுக்கான தூதுவராக நியமித்தமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர் தனது செல்வாக்கை இழந்தவராகக் காணப்படுகின்றார்.
பதவி விலகக் கோரும் குரல்களைப் புறக்கணித்துள்ள ஸ்டார்மர், தான் தொடர்ந்தும் பிரதமராகத் தொடரப் போவதாகக் கூறியுள்ளார். எனினும் நாளுக்கு நாள் கட்சிக்குள் அதிகரித்துவரும் எதிர்ப்பைச் சமாளித்து அவர் தாக்குப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
தற்போதைய நிலையில் பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் மூவர் முன்னணியில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்டார்மரின் அமைச்சரவையில் துணைப் பிரதமராக முன்னர் பணியாற்றிய இடதுசாரித் தொழிற்சங்கவாதியான அங்கெலா ராய்னரின் பெயர் முதலாவது இடத்தில் உள்ளது. தான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அவர் இதுவரை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்காத போதிலும் அவர் போட்டியிடக் கூடும் என ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டுள்ளன.
அதேவேளை, சொத்து ஒன்றை கொள்வனவு செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த வருடத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே அவர் தனது துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தார். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக உள்ள வெஸ் ஸ்றீற்றிங் ஒரு பலமான போட்டியாளராக உள்ளார். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுவதற்கு மாறாக கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைமைத்துவ மாற்றத்துக்கு இவர் முயற்சி செய்வதாக செய்திகள் கூறுகின்றன.
மன்செஸ்டர் மாநகர முதல்வராக உள்ள அன்டி பேர்ண்ஹாம் மூன்றாவது இடத்தில் உள்ளார். கட்சியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் இவர் பிரதமராக வருவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக மாற வேண்டும். பெப்ரவரி மாதம் நடைபெற்ற கோர்ட்டன் மற்றும் டென்டன் தொகுதி இடைத் தேர்தலில் அவர் போட்டியிட முடிவு செய்த போதிலும் கட்சி அதற்கு இடம் கொடுத்திருக்கவில்லை.
பிரதமர் பதவியில் மாற்றம் கொண்டு வருவதாயின் 20சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவது குறைந்தது 81 பேர் கூட்டாகக் குரல் கொடுக்க வேண்டும். ஸ்டார்மரின் தலைமைத்துவம் மீதான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை எட்டுவது சுலபம் என்றே தெரிகிறது.
ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்தவரை காலங்காலமாக தொழிற்கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளே ஆட்சியைப் பகிர்ந்துகொண்டு வந்துள்ளன. ஆனால், இம்முறை நடைபெற்ற இடைத் தேர்தலின் முடிவுகள் அத்தகைய நடைமுறை எதிர்காலத்தில் முடிவுக்கு வரக்கூடும் எனக் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.
மே மாதம் ஏழாம் திகதி இங்கிலாந்தில் 5,066 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் 136 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் நடைபெற்றது. அதேபோல் வேல்ஸில் இரண்டு உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தலுடன் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பாராளுமன்றங்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தல்களில் சீர்திருத்தக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை பாரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
2018இல் தொடங்கப்பட்ட, நைஜல் ஃபராஜ் தலைமையிலான சீர்திருத்தக் கட்சி மொத்தமாக 26 சதவீத வாக்குகளைப் பெற்று, 1,454 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 14 உள்ளூராட்சிச் சபைகளையும் புதிதாகக் கைப்பற்றி உள்ளது. முன்னர் வெறுமனே இரண்டு ஆசனங்களை மாத்திரமே இந்தக் கட்சி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாகவும் இதுவே உள்ளது.
இரண்டாவது பாரிய வெற்றியைப் பசுமைக் கட்சி பதிவு செய்துள்ளது. சக் பொலன்ஸ்கி தலைமையிலான இந்தக் கட்சி 18 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 587 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இந்தக் கட்சி 5 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது. கடந்த முறையை விடவும் 441 இடங்களை இந்தக் கட்சி அதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சியும் ஆச்சரியப்படத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 16 சதவீத வாக்குகளைப் பெற்ற இந்தக் கட்சி 844 உறுப்பினர்களுடன் 15 சபைகளையும் கைப்பற்றி உள்ளது. முன்னைய தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு சபையையும், 155 உறுப்பினர்களையும் மேலதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள ஆளும் தொழிற்கட்சி 1,068 ஆசனங்களையும், 28 உள்ளூராட்சிச் சபைகளையும் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 17 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள இந்தக் கட்சி 1,498 ஆசனங்களையும், 38 சபைகளையும் இழந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் நாட்டில் ஆட்சியையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியக் கட்சியான பழமைவாதக் கட்சியும் இம்முறை பின்னடைவையே சந்தித்துள்ளது. 17 சதவீத வாக்குகளை இந்தக் கட்சி பெற்றுக் கொண்டுள்ள போதிலும், 6 சபைகளையும் 563 உறுப்பினர்களையும் இழந்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தக் கட்சியின் பிடியில் 9 சபைகளும், 801 உறுப்பினர்களும் மாத்திரமே உள்ளனர்.
ஸ்கொட்லான்ட் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்கொட் தேசியக் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளது. 129 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இந்தக் கட்சி 58 இடங்களை வென்றுள்ளது. அதேவேளை கடந்த முறையை விட 6 இடங்களை இழந்துள்ளது. இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள தொழிற்கட்சி 17 இடங்களைப் பெற்றுள்ளது. இந்தக் கட்சி ஆறு இடங்களைப் பறிகொடுத்துள்ளது.
மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள சீர்திருத்தக் கட்சி முதல் தடவையாகப் 17 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. 15 ஆசனங்களைப் பெற்றுள்ள பசுமைக் கட்சி, கடந்த முறையை விடவும் ஐந்து ஆசனங்களை அதிகமாகப் பெற்றுள்ளது. 19 ஆசனங்களை இழந்துள்ள பழமைவாதக் கட்சி 12 இடங்களை மாத்திரமே வென்றுள்ளது. லிபரல் ஜனநாயகக் கட்சி 10 இடங்களை வென்றுள்ளது. இந்தக் கட்சி முன்னரை விட 6 இடங்களை அதிகமாகப் பெற்றுள்ளது.
96 அங்கத்தவர்களைக் கொண்டுள்ள வேல்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் வேல்ஸ் கட்சி (Plaid Cymru) 26 ஆண்டு கால தொழிற்கட்சியின் ஆட்சியைப் பதவியில் இருந்து அகற்றி வெற்றி பெற்றுள்ளது. 35.4 சதவீத வாக்குகளைப் பெற்ற இக்கட்சி 43 ஆசனங்களைப் பெற்றுள்ளது. முன்னரை விட 30 ஆசனங்களை அதிகமாக இந்தக் கட்சி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள சீர்திருத்தக் கட்சி முதல் தடவையாக 34 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது.
ஆட்சியை இழந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள தொழிற்கட்சி 9 இடங்களை மாத்திரமே பெற்றுள்ளது. இந்தக் கட்சி 21 இடங்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் உள்ள பழமைவாதக் கட்சி 9 இடங்களை இழந்து 7 ஆசனங்களை மாத்திரம் வென்றுள்ளது. பசுமைக் கட்சி முதல் தடவையாக இரண்டு இடங்களை வென்றுள்ள அதேவேளை லிபரல் ஜனநாயகக் கட்சி தனது ஒரு ஆசனத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
பெரும்பான்மையான தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள போதிலும் 2029இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரைக்கும் தானே பிரதமராகத் தொடரப் போவதாக ஸ்டார்மர் தொடர்ந்தும் கூறி வருகிறார். ஆனால், அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவதைத் தடுத்துவிட முடியவில்லை. தற்போதைய நிலையில் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு பூச்சியத்துக்குக் கீழே 59 சதவீத வரை சென்றுள்ள நிலையில் அவரது பதவி கிட்டிய எதிர்காலத்தில் இல்லாதுவிட்டாலும் வெகு விரைவில் பறி போகும் வாய்ப்பு உள்ளது என்பதே கசப்பான யதார்த்தம்.