;
Athirady Tamil News

பதவி இழப்பாரா பிரித்தானியப் பிரதமர்?

0

ஐக்­கிய இராச்­சி­யத்தில் நடை­பெற்ற தேர்­தல்­களில் ஆளும் தொழிற் கட்சி பாரிய பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளதைத் தொடர்ந்து பிர­தமர் கெய்ர் ஸ்டார்­மரை பதவி விலகக் கோரும் குரல்கள் கட்­சிக்குள் எழுந்­துள்­ளன.

2024ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் மாபெரும் வெற்றி பெற்று தொழிற்­கட்சி ஆட்­சி­ய­மைத்­தது. 14வரு­டங்­க­ளாக நீடித்த பழ­மை­வாதக் கட்­சியின் ஆட்­சியை முடி­வுக்குக் கொண்­டு­வந்த அந்த வெற்­றிக்கு வித்­திட்ட ஸ்டார்மர், தற்­போது பொது மக்­களின் செல்­வாக்கை முற்­றி­லு­மாக இழந்த ஒரு பிர­த­ம­ராக விளங்­கு­கிறார்.

தற்­போ­தைய தேர்தல் பின்­ன­டைவு மட்­டு­மன்றி காஸா யுத்­தத்தில் இஸ்­ரே­லுக்கு வழங்­கிய ஆத­ரவு, பலஸ்­தீன ஆத­ரவு போராட்­டக்­கா­ரர்­களை ஒடுக்­கு­வ­தற்கு மேற் ­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள், சட்­ட­வி­ரோத குடி­யேற்­றக்­கா­ரர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் ஏற்­பட்ட பின்­ன­டைவு, எப்ஸ்டைன் விவ­கா­ரத்தில் சிக்­கிய நபரை அமெ­ரிக்­கா­வுக்­கான தூது­வ­ராக நிய­மித்­தமை உள்­ளிட்ட பல கார­ணங்­களால் அவர் தனது செல்­வாக்கை இழந்­த­வ­ராகக் காணப்­ப­டு­கின்றார்.

பதவி விலகக் கோரும் குரல்­களைப் புறக்­க­ணித்­துள்ள ஸ்டார்மர், தான் தொடர்ந்தும் பிர­த­ம­ராகத் தொடரப் போவ­தாகக் கூறி­யுள்ளார். எனினும் நாளுக்கு நாள் கட்­சிக்குள் அதி­க­ரித்­து­வரும் எதிர்ப்பைச் சமா­ளித்து அவர் தாக்குப் பிடிப்­பாரா என்ற கேள்வி எழு­கி­றது.

தற்­போ­தைய நிலையில் பிர­தமர் பத­விக்­கான போட்டிக் களத்தில் மூவர் முன்­ன­ணியில் இருப்­ப­தாக ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. ஸ்டார்­மரின் அமைச்­ச­ர­வையில் துணைப் பிர­த­ம­ராக முன்னர் பணி­யாற்­றிய இட­து­சாரித் தொழிற்­சங்­க­வா­தி­யான அங்­கெலா ராய்­னரின் பெயர் முத­லா­வது இடத்தில் உள்­ளது. தான் பிர­தமர் பத­விக்குப் போட்­டி­யிடப் போவ­தாக அவர் இது­வரை வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்து இருக்­காத போதிலும் அவர் போட்­டி­யிடக் கூடும் என ஊட­கங்கள் ஊகங்­களை வெளி­யிட்­டுள்­ளன.

அதே­வேளை, சொத்து ஒன்றை கொள்­வ­னவு செய்­ததில் வரி ஏய்ப்பு செய்­த­தாக கடந்த வரு­டத்தில் அவர் மீது குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இதனைத் தொடர்ந்தே அவர் தனது துணைப் பிர­தமர் பத­வியில் இருந்து விலகி இருந்தார். அந்த வழக்கு இன்­னமும் நிலு­வையில் உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போ­தைய அர­சாங்­கத்தில் சுகா­தார அமைச்­ச­ராக உள்ள வெஸ் ஸ்றீற்றிங் ஒரு பல­மான போட்­டி­யா­ள­ராக உள்ளார். தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ரவை நாடு­வ­தற்கு மாறாக கட்சி உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் தலை­மைத்­துவ மாற்­றத்­துக்கு இவர் முயற்சி செய்­வ­தாக செய்­திகள் கூறு­கின்­றன.

மன்­செஸ்டர் மாந­கர முதல்­வ­ராக உள்ள அன்டி பேர்ண்ஹாம் மூன்­றா­வது இடத்தில் உள்ளார். கட்­சியில் செல்­வாக்கு மிக்­க­வ­ராகக் கரு­தப்­படும் இவர் பிர­த­ம­ராக வரு­வ­தற்கு முன்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாற வேண்டும். பெப்­ர­வரி மாதம் நடை­பெற்ற கோர்ட்டன் மற்றும் டென்டன் தொகுதி இடைத் தேர்­தலில் அவர் போட்­டி­யிட முடிவு செய்த போதிலும் கட்சி அதற்கு இடம் கொடுத்­தி­ருக்­க­வில்லை.

பிர­தமர் பத­வியில் மாற்றம் கொண்டு வரு­வ­தாயின் 20சத­வீத பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதா­வது குறைந்­தது 81 பேர் கூட்­டாகக் குரல் கொடுக்க வேண்டும். ஸ்டார்­மரின் தலை­மைத்­துவம் மீதான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலையில் இந்த எண்­ணிக்­கையை எட்­டு­வது சுலபம் என்றே தெரி­கி­றது.

ஐக்­கிய இராச்­சி­யத்தைப் பொறுத்­த­வரை காலங்­கா­ல­மாக தொழிற்­கட்சி மற்றும் பழ­மை­வாதக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­களே ஆட்­சியைப் பகிர்ந்­து­கொண்டு வந்­துள்­ளன. ஆனால், இம்­முறை நடை­பெற்ற இடைத் தேர்­தலின் முடி­வுகள் அத்­த­கைய நடை­முறை எதிர்­கா­லத்தில் முடி­வுக்கு வரக்­கூடும் எனக் கோடிட்டுக் காட்டி நிற்­கின்­றன.

மே மாதம் ஏழாம் திகதி இங்­கி­லாந்தில் 5,066 உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் 136 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்தல் நடை­பெற்­றது. அதேபோல் வேல்ஸில் இரண்டு உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கான இடைத் தேர்­த­லுடன் ஸ்கொட்­லாந்து மற்றும் வேல்ஸ் பாரா­ளு­மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலும் நடை­பெற்­றது. நடை­பெற்ற தேர்­தல்­களில் சீர்­தி­ருத்தக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகி­யவை பாரிய வெற்­றியைப் பதிவு செய்­துள்­ளன.

2018இல் தொடங்­கப்­பட்ட, நைஜல் ஃபராஜ் தலை­மை­யி­லான சீர்­தி­ருத்தக் கட்சி மொத்­த­மாக 26 சத­வீத வாக்­கு­களைப் பெற்று, 1,454 இடங்­களில் வெற்றி பெற்­றுள்­ள­துடன் 14 உள்­ளூ­ராட்சிச் சபை­க­ளையும் புதி­தாகக் கைப்­பற்றி உள்­ளது. முன்னர் வெறு­மனே இரண்டு ஆச­னங்­களை மாத்­தி­ரமே இந்தக் கட்சி கொண்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தேர்­தலில் அதிக வாக்­கு­களைப் பெற்ற கட்­சி­யா­கவும் இதுவே உள்­ளது.

இரண்­டா­வது பாரிய வெற்­றியைப் பசுமைக் கட்சி பதிவு செய்­துள்­ளது. சக் பொலன்ஸ்கி தலை­மை­யி­லான இந்தக் கட்சி 18 சத­வீத வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது. 587 இடங்­களில் வெற்றி பெற்­றுள்ள இந்தக் கட்சி 5 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளையும் கைப்­பற்றி ஆட்­சி­ய­மைக்க உள்­ளது. கடந்த முறையை விடவும் 441 இடங்­களை இந்தக் கட்சி அதி­க­மாகப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நடை­பெற்ற தேர்­தலில் லிபரல் ஜன­நா­யகக் கட்­சியும் ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க வெற்­றியைப் பதிவு செய்­துள்­ளது. 16 சத­வீத வாக்­கு­களைப் பெற்ற இந்தக் கட்சி 844 உறுப்­பி­னர்­க­ளுடன் 15 சபை­க­ளையும் கைப்­பற்றி உள்­ளது. முன்­னைய தேர்­த­லோடு ஒப்­பி­டு­கையில் ஒரு சபை­யையும், 155 உறுப்­பி­னர்­க­ளையும் மேல­தி­க­மாகப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தேர்­தலில் பாரிய பின்­ன­டைவைச் சந்­தித்­துள்ள ஆளும் தொழிற்­கட்சி 1,068 ஆச­னங்­க­ளையும், 28 உள்­ளூ­ராட்சிச் சபை­க­ளையும் வென்­றுள்­ளது. ஒட்­டு­மொத்­த­மாக 17 சத­வீத வாக்­கு­களைப் பெற்று இரண்­டா­வது இடத்தில் உள்ள இந்தக் கட்சி 1,498 ஆச­னங்­க­ளையும், 38 சபை­க­ளையும் இழந்­துள்­ளது. அத்­துடன் வேல்ஸ் நாட்டில் ஆட்­சி­யையும் இழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரம்­ப­ரியக் கட்­சி­யான பழ­மை­வாதக் கட்­சியும் இம்­முறை பின்­ன­டை­வையே சந்­தித்­துள்­ளது. 17 சத­வீத வாக்­கு­களை இந்தக் கட்சி பெற்றுக் கொண்­டுள்ள போதிலும், 6 சபை­க­ளையும் 563 உறுப்­பி­னர்­க­ளையும் இழந்­துள்­ளது. தற்­போ­தைய நிலையில் இந்தக் கட்­சியின் பிடியில் 9 சபை­களும், 801 உறுப்­பி­னர்­களும் மாத்­தி­ரமே உள்­ளனர்.

ஸ்கொட்லான்ட் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்கொட் தேசியக் கட்சி அதிக இடங்­களை வென்­றுள்­ளது. 129 ஆச­னங்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தில் இந்தக் கட்சி 58 இடங்­களை வென்­றுள்­ளது. அதே­வேளை கடந்த முறையை விட 6 இடங்­களை இழந்­துள்­ளது. இரண்டாம் இடத்தைப் பெற்­றுள்ள தொழிற்­கட்சி 17 இடங்­களைப் பெற்­றுள்­ளது. இந்தக் கட்சி ஆறு இடங்­களைப் பறி­கொ­டுத்துள்­ளது.

மூன்றாம் இடத்தைப் பெற்­றுள்ள சீர்­தி­ருத்தக் கட்சி முதல் தட­வை­யாகப் 17 ஆச­னங்­களைக் கைப்­பற்றிக் கொண்­டுள்­ளது. 15 ஆச­னங்­களைப் பெற்­றுள்ள பசுமைக் கட்சி, கடந்த முறையை விடவும் ஐந்து ஆச­னங்­களை அதி­க­மாகப் பெற்­றுள்­ளது. 19 ஆச­னங்­களை இழந்­துள்ள பழ­மை­வாதக் கட்சி 12 இடங்­களை மாத்­தி­ரமே வென்­றுள்­ளது. லிபரல் ஜன­நா­யகக் கட்சி 10 இடங்­களை வென்­றுள்­ளது. இந்தக் கட்சி முன்­னரை விட 6 இடங்­களை அதி­க­மாகப் பெற்­றுள்­ளது.

96 அங்­கத்­த­வர்­களைக் கொண்­டுள்ள வேல்ஸ் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வேல்ஸ் கட்சி (Plaid Cymru) 26 ஆண்டு கால தொழிற்­கட்­சியின் ஆட்­சியைப் பத­வியில் இருந்து அகற்றி வெற்றி பெற்­றுள்­ளது. 35.4 சத­வீத வாக்­கு­களைப் பெற்ற இக்­கட்சி 43 ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. முன்­னரை விட 30 ஆச­னங்­களை அதி­க­மாக இந்தக் கட்சி பெற்­றுள்­ளது. இரண்­டா­வது இடத்தைப் பிடித்­துள்ள சீர்­தி­ருத்தக் கட்சி முதல் தட­வை­யாக 34 ஆச­னங்­களைக் கைப்­பற்றி உள்­ளது.

ஆட்­சியை இழந்து மூன்­றா­வது இடத்­துக்குத் தள்­ளப்­பட்­டுள்ள தொழிற்­கட்சி 9 இடங்­களை மாத்­தி­ரமே பெற்­றுள்­ளது. இந்தக் கட்சி 21 இடங்­களை இழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. நான்­கா­வது இடத்தில் உள்ள பழ­மை­வாதக் கட்சி 9 இடங்­களை இழந்து 7 ஆசனங்களை மாத்திரம் வென்றுள்ளது. பசுமைக் கட்சி முதல் தடவையாக இரண்டு இடங்களை வென்றுள்ள அதேவேளை லிபரல் ஜனநாயகக் கட்சி தனது ஒரு ஆசனத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பெரும்பான்மையான தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள போதிலும் 2029இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரைக்கும் தானே பிரதமராகத் தொடரப் போவதாக ஸ்டார்மர் தொடர்ந்தும் கூறி வருகிறார். ஆனால், அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவதைத் தடுத்துவிட முடியவில்லை. தற்போதைய நிலையில் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு பூச்சியத்துக்குக் கீழே 59 சதவீத வரை சென்றுள்ள நிலையில் அவரது பதவி கிட்டிய எதிர்காலத்தில் இல்லாதுவிட்டாலும் வெகு விரைவில் பறி போகும் வாய்ப்பு உள்ளது என்பதே கசப்பான யதார்த்தம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.