;
Athirady Tamil News

டிரம்ப், நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் பரிசு தொகை; ஈரான் புது திட்டம்

0

தெஹ்ரான்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரை சுட்டு கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டில் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றி தி டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் இப்ராகிம் அஜிஜி கூறும்போது, ஈரானின் ராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரின் பதிலடி நடவடிக்கை என்ற பெயரில் வரைவு மசோதா ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.

இதன்படி டிரம்ப்பை படுகொலை செய்யும் நபருக்கு யூரோ மதிப்பில் 5 கோடி (இந்திய மதிப்பில் ரூ.561 கோடி) பரிசு தொகை வழங்கப்படும் என அந்த மசோதா தெரிவிக்கின்றது.

டிரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க கடற்படை தளபதி பிராட் கூப்பர் ஆகிய 3 பேரும் காமேனி படுகொலைக்கு முக்கிய பின்னணியாக இருந்தவர்கள். அந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள். இதனால், இதற்கான சரியான பதிலடியை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும் என அஜிஜி கூறியுள்ளார். இவர்கள் 3 பேரையும் நரகத்திற்கு அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசு தொகையை கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ஈரான் நாடாளுமன்ற தேச பாதுகாப்பு குழுவின் துணை தலைவரான மஹ்மூத் நபாவியன் கூறும்போது, ஈரான் அல்லது அதன் மைய தலைமைக்கு எதிரான எந்தவொரு நேரடி ராணுவ தாக்குதலுக்கும் விரைவான பதிலடி கொடுக்கப்படும். அது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் மட்டும் நில்லாமல், அவர்களுடன் கூட்டணியாக சேர்ந்து செயல்படும் அரபு நாடுகளின் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வகையில் கூறினார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் அப்போது சூளுரைத்தது.

எனினும், ஈரானில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.