நீர்கொழும்பு சிறை கலவரம்; காயமடைந்தவர்களை காண சென்ற சுகாதார அமைச்சர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள், சிறைகைதிகளை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் சென்று நலன் விசாரித்திருந்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) மற்றும் திங்கட்கிழமையன்று (6) இடம்பெற்ற கடும் மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளும், சிறைக் கைதிகளும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் 72,79 ஆகிய வார்ட்டுகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் அளவில் அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சிகிச்சைப் பெற்று வருபவர்களின் நலன் மற்றும் சிகிச்சை சேவைகள், அவசரத் தேவைகள் மற்றும் பிற சேவைகள் வழங்குவது தொடர்பிலும் வைத்தியர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் கேட்டரிந்துக் கொண்டார்.
அதற்கமைய தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 அதிகாரிகள், 14 கைதிகள் உள்ளடங்களாக 29 பேர் சிகிச்சைப்பெற்றுவருவதோடு, அவர்களில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.