தேரரால் சிறுமி துஷ்பிரயோகம் ; தாயின் வங்கி கணக்கை ஆராய உத்தரவு
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும் உடனடியாக நித்தம்புவப் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி எண்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை, எவ்விதத் தாமதமுமின்றிப் பொலிஸாரிடம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பிரதம நீதவான் தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக உத்தரவு
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நித்தம்புவப் பொலிஸார் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டே மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரோவை, எதிர்வரும் 22ஆம் திகதி அனுராதபுர பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், முதலாம் சந்தேகநபரான குறித்த தேரோ, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது மகளைப் பணத்திற்காகவே வேண்டுமென்றே பிறரிடம் ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுராதபுர பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்தக்குற்றவியல் விசாரணை தொடர்பான ஆவணங்களின் பிரதிகள், மேலதிக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக ஏற்கனவே சட்டமாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மேலதிக அறிக்கையை நித்தம்புவப் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.